தக்காளி கிலோ ரூ.120-க்கு விற்பனை


தக்காளி கிலோ ரூ.120-க்கு விற்பனை
x
தினத்தந்தி 29 Jun 2023 1:15 AM IST (Updated: 29 Jun 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி பகுதியில் தக்காளி விலை புதிய உச்சத்தை தொட்டு, கிலோ ரூ.120-க்கு விற்பனை ஆனது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தேனி

தக்காளி வரத்து குறைவு

தேனி மாவட்டத்தில் தேனி, ஆண்டிப்பட்டி, சின்னமனூர் பகுதிகளில் காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த காய்கறி மார்க்கெட் மூலம் தேனி மாவட்டத்தில் விளையும் காய்கறிகள் தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும், கேரள மாநிலத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் தக்காளி விளைச்சல் குறைவாக உள்ளதால் சந்தைக்கு வரத்து குறைந்தது. இதனால் விலை உயர்ந்தது. தேனி மாவட்டத்தில் உள்ள சந்தைகளில் சதம் அடித்து, ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ரூ.120-க்கு விற்பனை

இதைத்தொடர்ந்து தமிழக அரசு பண்ணை பசுமை கடைகளில் தக்காளி விலை கிலோ ரூ.68-க்கு விற்பனை செய்யப்படும் என்று அறிவித்தது. இந்த நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சந்தையில் தக்காளி விலை புதிய உச்சத்தை தொட்டது. நேற்று சில்லறை விலையில் ஒரு கிலோ தக்காளி ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது.

14 கிலோ கொண்ட ஒரு தக்காளி பெட்டி ரூ.1,300 முதல் ரூ.1,400 வரையில் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது தேனி மாவட்டத்தில் தக்காளி விளைச்சல் இல்லாததால் கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி ஆகிய பகுதிகளில் இருந்து தேனிக்கு தக்காளி கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அன்றாட சமையலுக்கு தக்காளி அவசியமான பொருள் என்பதால், இந்த விலை உயர்வால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


Related Tags :
Next Story