தக்காளி கிலோ ரூ.180-க்கு விற்பனை
வேலூரில் உள்ள மளிகை, காய்கறி கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.180-க்கு விற்பனையானது. தொடர்ந்து தக்காளி விலை உயர்ந்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.
வரத்து குறைவு
பொதுமக்கள் தினசரி சமையலுக்கு பயன்படுத்தும் காய்கறிகளில் தக்காளி முக்கிய அங்கம் வகிக்கிறது. தமிழகத்தில் தக்காளி விலை இந்த மாதம் தொடக்கம் முதல் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. விளைச்சல் இன்மை மற்றும் மழையின் காரணமாக மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து குறைந்ததால் விலை அதிகரித்துள்ளது.
அதனால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். தக்காளி விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு ரேஷன் கடைகளில் மார்க்கெட்டை விட குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்து வருகிறது. ஆனாலும் நாளுக்கு நாள் தக்காளியின் விலை அதிகரித்து வருகிறது.
ஒரு கிலோ தக்காளி ரூ.180
ஆந்திராவில் இருந்து வேலூர் நேதாஜி மார்க்கெட்டிற்கு வரும் தக்காளியின் வரத்து குறைந்துள்ளது. எனவே நேதாஜி மார்க்கெட்டில் நேற்று முன்தினம் ஒரு கிலோ முதல் ரக தக்காளி ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் நேதாஜி மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை காய்கறி கடைகளில் தக்காளி ரூ.160-க்கு விற்கப்பட்டது.
வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள மளிகை கடைகள், சில்லறை விற்பனை காய்கறி கடைகளில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.180-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் சமையலுக்கு காய்கறி வாங்க சென்ற இல்லத்தரசிகள் தக்காளியின் விலையை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். கடந்த மாதம் ஒரு கிலோ வாங்கி சென்ற இல்லத்தரசிகள் தற்போது அரை கிலோ வாங்கி சென்றனர். தக்காளி பயன்படுத்தாத வகையில் சமையல் செய்ய வேண்டும் என்று பிற காய்கறிகளை அதிக அளவில் வாங்கினர்.
ரேஷன் கடைகளில் நேற்று தக்காளிகள் விற்பனை செய்யப்படவில்லை. உழவர்சந்தைகளில் தக்காளி கிலோ ரூ.115-க்கு விற்பனை செய்யப்பட்டது. தக்காளியின் விலையேற்றத்தால் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் மாதாந்திர பட்ஜெட்டை தாண்டி செலவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.