திருவண்ணாமலையில் நாளை மகாதீபம்


திருவண்ணாமலையில் நாளை மகாதீபம்
x

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி 2,668 அடி உயர மலை உச்சியில் நாளை(செவ்வாய்க்கிழமை) மகாதீபம் ஏற்றப்படுகிறது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி 2,668 அடி உயர மலை உச்சியில் நாளை(செவ்வாய்க்கிழமை) மகாதீபம் ஏற்றப்படுகிறது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோவிலில் பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

மலையே சிவன்

திருமாலுக்கும், பிரம்மனுக்கும் இடையே ஏற்பட்ட 'தான்' என்ற அகந்தையை போக்க சிவபெருமான் திருவண்ணாமலையில் அடிமுடி காண முடியாத அக்னி பிழம்பாக காட்சியளித்ததாக ஐதீகம். அந்த நாளே கார்த்திகை தீபத்திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள மலையே சிவனாக வணங்கப்பட்டு வருகிறது. இந்த மலையை பக்தர்கள் அண்ணாமலை என்று அழைக்கின்றனர்.

சிவபெருமான் அக்னி பிழம்பாக காட்சி கொடுத்ததால் காா்த்திகை தீபத்தன்று இந்த மலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. பவுர்ணமி மற்றும் கார்த்திகை தீபத்திருவிழா நாட்களில் பல லட்சம் பக்தர்கள் இந்த மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்கின்றனர்.

கார்த்திகை தீபத் திருவிழா

கார்த்திகை தீபத்திருவிழா 10 நாட்கள் நடைபெறும் விழாவாகும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக தீப திருவிழா கோவிலின் வளாகத்திற்குள் பக்தர்களின்றி நடைபெற்றது. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டு உள்ளதால் இந்த ஆண்டு தீபத் திருவிழா 2 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைபோல் கோலாகலமாக நடைபெறுகிறது.

அதன்படி இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதிஉலாவும், இரவில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் வெவ்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதனை முன்னிட்டு நாளை அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற உள்ளது.

மலை உச்சியில் மகாதீபம்

அதிகாலை 4 மணிக்கு சாமி சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணிதீபம் ஏற்றப்படும். இதையடுத்து பிரம்ம தீர்த்தத்தில் சுப்ரமணியர் சுவாமி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும்.

மாலையில் பஞ்சமூர்த்திகள், சாமி சன்னதி முன்பாக எழுந்தருள்வார்கள். அதைத்தொடர்ந்து 6 மணிக்கு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர், சாமி சன்னதியில் இருந்து ஆடியபடியே கொடிமரம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார்.

அர்த்தநாரீஸ்வரர் காட்சி தந்ததும் சரியாக மாலை 6 மணிக்கு சாமி சன்னதி முன்பு அகண்டதீபம் ஏற்றப்படும். அதேநேரத்தில் மலைஉச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். அப்போது கோவிலில் கூடியிருக்கும் பக்தர்கள் 'அண்ணாமலையாருக்கு அரோகரா' என்ற பக்தி கோஷத்துடன் சாமி தரிசனம் செய்வார்கள். மகாதீபத்தை முன்னிட்டு காலை முதலே பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

மகா தீபம் ஏற்றியதும் கிரிவலப்பாதையில் இருக்கும் பக்தர்கள் மலையை நோக்கி மகாதீபத்தை வணங்குவார்கள். மகாதீபம் ஏற்றப்படும் நாளில் திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் மலையில் தீபம் ஏற்றும் வரை தங்கள் வீடுகளிலோ, வியாபார நிறுவனங்களிலோ மின்விளக்குகள் போடமாட்டார்கள்.

பவுர்ணமி கிரிவலம்

திருவண்ணாமலை மலை உச்சியில் மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றிய பிறகே விளக்கு போடுவார்கள். மேலும் தங்கள் வீடுகளிலும், வீட்டின் முன்பும் அகல்விளக்குகள் ஏற்றி வழிபடுவார்கள். அப்போது திருவண்ணாமலை நகரமே ஒளிவெள்ளத்தில் காட்சியளிக்கும். மகாதீபம் ஏற்றியதும் திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலும் உள்ள பொதுமக்கள் வீடுகள் மற்றும் வியாபார நிறுவனங்களில் அகல்விளக்குகள் ஏற்றி மலையை நோக்கி வழிபடுவார்கள்.

கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு இந்த ஆண்டு 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக தீபத்தன்று மற்றும் தீபத்திற்கு மறுநாள் பவுர்ணமி தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு தீபத்திற்கு மறுநாளான 7-ந் தேதி (புதன்கிழமை) காலை 8.35 மணிக்கு பவுர்ணமி தொடங்கி 8-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 9.33 நிறைவடைகிறது. அதனால் மகா தீபத்திற்கு மறுநாளும் திருவண்ணாமலையில் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பக்தர்களின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும் சென்னை உள்ளிட்ட இடங்களிலிருந்து சிறப்பு ரெயில்களும் இயக்கப்படுகின்றன. இவை இன்று (திங்கட்கிழமை) முதல் இயக்கப்பட உள்ளது. அதனால் இன்று முதல் திருவண்ணாமலை நகர் முழுவதும் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழியும்.

13 இடங்களில் தற்காலிக பஸ் நிலையம்

நெரிசலை தவிர்ப்பதற்காக திருவண்ணாமலை நகரை சுற்றி இணைக்கும் புறவழிச்சாலைகள் உள்பட 13 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு பஸ் நிலையத்தில் இருந்து மற்றொரு பஸ் நிலையத்திற்கு செல்ல ஆட்டோ வசதி செய்யப்பட்டுள்ளது. கோவில் கிரிவலப்பாதை மற்றும் தற்காலிக பஸ் நிலையங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதேபோல் குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. குப்பைகளை சாலை, தெருக்களில் போடாமல் இருக்க பல்வேறு இடங்களில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

அனுமதி அளிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே அன்னதானம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மகாதீபத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவதால் பாதுகாப்பு பணிக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தலைமையில் சுமார் 12 ஆயிரம் போலீசார் திருவண்ணாமலையில் குவிக்கப்பட்டுள்ளனர்.

விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை நகரை சுற்றி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் 500-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுதவிர பல்வேறு நவீன சாதனங்கள் மூலமும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.

அதிகாரிகள் ஆய்வு

மகா தீபத்தை முன்னிட்டு உணவு விடுதிகள், ஓட்டல்கள், சத்திரங்களில் தரமான உணவு வழங்கப்படுகிறதா? என்றும், சுகாதாரமாக உள்ளதா என்றும் உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

கோவிலை சுற்றி மற்றும் கிரிவலப்பாதையில் என சுமார் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

செயின் பறிப்பு, திருட்டை தடுக்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு குற்றப்பிரிவு போலீசார் வரவழைக்கப்பட்டு சாதாரண உடையில் கண்காணித்து வருகின்றனர். மேலும் நாளை பாபர்மசூதி இடிப்பு தினம் என்பதால் போலீஸ் பாதுகாப்பும், கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

கமாண்டோ படைவீரர்கள்

மகாதீபம் ஏற்றும் மலைஉச்சியிலும், பக்தர்கள் மலைஏறும் இடத்திலும் கமாண்டோ படைவீரர்கள் நிறுத்தப்பட உள்ளனர். மகா தீபம் நாளை மாலை 6 மணிக்கு ஏற்றப்படுவதையொட்டி வெளிநாடு, பிற மாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு பக்தர்கள் வந்து குவிய தொடங்கி விட்டார்கள்.

அவர்கள் விடுதிகளில் தங்கி உள்ளனர். அதனால் விடுதிகள் பக்தர்களால் நிரம்பி வழிகின்றன. திருவண்ணாமலை நகரம் மற்றும் மாடவீதிகள் என எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாக காட்சி அளிக்கிறது. பெரும்பாலான பக்தர்கள் கிரிவலம் சென்றபடி உள்ளனர். இதனால் திருவண்ணாமலை நகரமே விழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது.


Next Story