தக்காளி விலை தொடர் சரிவு


தக்காளி விலை தொடர் சரிவு
x

உடுமலை பகுதியில் தக்காளி விலை தொடர்ந்து சரிந்து வருவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

திருப்பூர்

உடுமலை பகுதியில் தக்காளி விலை தொடர்ந்து சரிந்து வருவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

வெளியூர் வியாபாரிகள்

உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் காய்கறிகள் சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இங்கு விளையும் காய்கறிகளை உடுமலை சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இங்குள்ள கமிஷன் மண்டிகள் மூலம் விற்பனை செய்யப்படும் காய்கறிகளை பல மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் வந்து வாங்கிச்செல்கிறார்கள். அத்துடன் கேரள மாநில வியாபாரிகளும் அதிக அளவில் இங்கிருந்து காய்கறிகளை கொள்முதல் செய்து கொண்டு செல்கின்றனர்.

ஆனாலும் ஆண்டுதோறும் தக்காளி விவசாயிகள் இழப்பை சந்திப்பது தொடர்கதையாகவே உள்ளது. அந்தவகையில் தற்போது தக்காளி விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

'தக்காளி விலை உச்சம் தொடும் போது அனைத்துத் தரப்பினராலும் பேசப்படும் விஷயமாக மாறிவிடுகிறது. உடனடியாக விலை உயர்வைத் தடுக்க சாகுபடிப் பரப்பை அதிகரிக்கும் திட்டம் வகுக்கப்படுகிறது. இதனால் உற்பத்தி அதிகரித்து விலை சரிவை சந்திப்பதால் விவசாயிகள் நஷ்டமடையும் நிலை ஏற்படுகிறது.

விவசாயிகள் நிலை

கடந்த சில வாரங்களுக்கு முன் ஒரு கிலோ தக்காளி விவசாயிகளிடமிருந்து ரூ.80 வரை கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் கடும் மகசூல் இழப்பை சந்தித்த அந்த சூழல் ஒரு சில விவசாயிகளுக்கு மட்டுமே லாபகரமானதாக அமைந்தது. ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. சுமார் 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.80 முதல் 130 வரை மட்டுமே விற்பனையாகிறது.

தற்போது பல மாவட்டங்களில் தக்காளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.இதனால் உடுமலை சந்தைக்கு வியாபாரிகள் வரவு குறைவாகவே உள்ளது. ஆனால் தக்காளி வரத்து அதிகமாக உள்ளது. எனவே வெளியூர் வியாபாரிகளைக் கவரும் நோக்கத்தில் சில வேளைகளில் இங்கு விலை குறைவாக விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால் இன்றைய நிலையில் உழவு, உரம், மருந்து, பறிகூலி, போக்குவரத்து என உற்பத்திச் செலவு பல மடங்காக உயர்ந்துள்ளது. குறைந்த விலைக்கு தக்காளி விற்பனையாவதால் விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்படுகிறது.

திட்டம் வகுக்க வேண்டும்

எனவே கடந்த காலங்களைப் போல வயலிலே தக்காளிகளை செடியுடன் அழிக்கும் அவல நிலை ஏற்படும் அபாயம் உள்ளது.

தக்காளி விலை உயரும் போது பொதுமக்களின் வருமானம் மற்றும் வாங்கும் திறன் குறித்து கவலைப்படும் யாரும் விலை குறையும் போது விவசாயிகளின் நிலை குறித்து கவலைப்படுவது கிடையாது.

எனவே தக்காளி சாகுபடியில் குறைந்தபட்ச விலை கிடைக்க தோட்டக்கலைத்துறை, வேளாண் வணிகத்துறை மற்றும் கூட்டுறவுத்துறை உள்ளிட்ட அரசுத்துறைகள் மூலம் திட்டம் வகுக்க வேண்டும்'என்று விவசாயிகள் கூறினர்.


Related Tags :
Next Story