தொன்போஸ்கோ பள்ளி முதலிடம்
மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் தொன்போஸ்கோ பள்ளி முதலிடம் பிடித்தது.
திருப்பத்தூர் மாவட்ட கல்வித்துறை சார்பில் வருவாய் மாவட்ட அளவிலான தடகளப்போட்டி ஜோலார்பேட்டையில் உள்ள சிறு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. ஜோலார்பேட்டை தொன் போஸ்கோ உயர்நிலைப் பள்ளியில் கால்பந்து மற்றும் பூபந்து போட்டி நடைபெற்றது. போட்டியினை அரசு மருத்துவர் புகழேந்தி தொடங்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ஐசக் சிறப்புரையாற்றினார். ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், திருப்பத்தூர் பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். இதில் 19 வயது பிரிவில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் ஜோலார்பேட்டை தொன் போஸ்கோ மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றனர். 17 வயதுக்கு உட்பட்ட கால்பந்து போட்டியில் திருப்பத்தூர் தொன் போஸ்கோ பள்ளி இரண்டாம் இடம் பிடித்தனர். 14 வயதுக்கு உட்பட்ட கால்பந்து போட்டியில் ஏலகிரி மலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மூன்றாம் இடம் பிடித்து வெற்றி பெற்றனர்.
இவர்கள் அடுத்த மாதம் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் மாநில அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்க உள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்தனர். முடிவில் உடற் கல்வி ஆசிரியர் ஏசுராஜ் நன்றி கூறினார்.