21 ரத்தக்கொதிப்பு மாத்திரைகளை சாப்பிட்டார்:கடலூர் மத்திய சிறையில் பிரபல ரவுடி தற்கொலை முயற்சி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை


21 ரத்தக்கொதிப்பு மாத்திரைகளை சாப்பிட்டார்:கடலூர் மத்திய சிறையில் பிரபல ரவுடி தற்கொலை முயற்சி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 18 Feb 2023 12:15 AM IST (Updated: 18 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மத்திய சிறையில் 21 ரத்தக்கொதிப்பு மாத்திரைகளை சாப்பிட்டு பிரபல ரவுடி தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடலூர்

கடலூர் முதுநகர்,

திருச்சி திருவெறும்பூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரன் மகன் தனசேகர் என்கிற எண்ணூர் தனசேகர்(வயது 42). பிரபல ரவுடியான இவர், சென்னை எண்ணூர் பகுதியில் சில ஆண்டுகளாக வசித்து வந்தார். இவர் மீது கொலை, கொலை முயற்சி, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

இதன் காரணமாக அவர், கடலூர் கேப்பர் மலையில் உள்ள மத்திய சிறையில் விசாரணை கைதியாக இருந்து வருகிறார். சிறையில் உள்ள வெளிச்சிறையில் தனி அறையில் அவர் அடைக்கப்பட்டிருந்தார்.

பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொல்ல...

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடலூா் மத்திய சிறையில் சிறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது எண்ணூர் தனசேகர் அறையில் இருந்து செல்போன் மற்றும் அதன் சார்ஜரை சிறை அதிகாரி மணிகண்டன் பறிமுதல் செய்தார். இதையடுத்து எண்ணூர் தனசேகரின் தூண்டுதலின்பேரில் சிறை அதிகாரி மணிகண்டன் குடும்பத்தினரை சிலர் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்ல முயற்சி செய்துள்ளனர். இதற்கு உடந்தையாக இருந்த சிறை அலுவலர் செந்தில்குமார் என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து எண்ணூா் தனசேகர் உள்பட சிலர் மீது கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தற்கொலை முயற்சி

இந்த நிலையில் மத்திய சிறையில் எண்ணூர் தனசேகர், கடந்த சில நாட்களாக மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு எண்ணூர் தனசேகர், தனக்கு வழங்கப்பட்ட 21 ரத்த கொதிப்பு மாத்திரைகளை ஒரே நேரத்தில் சாப்பிட்டார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை அங்கிருந்த சிறை காவலர்கள் மற்றும் அதிகாரிகள் மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டா்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பரபரப்பு

இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மன உளைச்சல் காரணமாக எண்ணூர் தனசேகர் தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரபல ரவுடி தற்கொலைக்கு முயன்ற சம்பவம், கடலூர் மத்திய சிறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story