சொகுசு பஸ்சில் உலகை வலம் வரும் வெளிநாட்டு தம்பதி


சொகுசு பஸ்சில் உலகை வலம் வரும் வெளிநாட்டு தம்பதி
x

வீட்டில் உள்ளது போன்ற வசதிகளை கொண்ட சொகுசு பஸ்சில் வெளிநாட்டு தம்பதி உலகை வலம்வந்து கொண்டிருக்கிறார்கள். நேற்று தனுஷ்கோடிக்கு வந்த அவர்கள், தினத்தந்திக்கு ருசிகர பேட்டி அளித்தனர்.

ராமநாதபுரம்

தனுஷ்கோடி,

வீட்டில் உள்ளது போன்ற வசதிகளை கொண்ட சொகுசு பஸ்சில் வெளிநாட்டு தம்பதி உலகை வலம்வந்து கொண்டிருக்கிறார்கள். நேற்று தனுஷ்கோடிக்கு வந்த அவர்கள், தினத்தந்திக்கு ருசிகர பேட்டி அளித்தனர்.

வெளிநாட்டு தம்பதி

ராமேசுவரம் முக்கிய ஆன்மிக தலமாகவும், அதன் அருகே உள்ள தனுஷ்கோடி சிறந்த சுற்றுலா தலமாகவும் விளங்குகின்றன. எனவே ராமேசுவரம் வரும் பக்தர்கள் அப்படியே கிழக்கு திசையின் கடைகோடியான தனுஷ்கோடி வரை ெசன்று கடலின் அழகை ரசிக்கிறார்கள். உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களில், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானவர்கள் நாள்தோறும் தனுஷ்கோடி வருகிறார்கள்.

இந்த நிலையில், தனுஷ்கோடிக்கு நேற்று அதிநவீன சிறிய பஸ் ஒன்றில், வெளிநாட்டு தம்பதியான ஹெயின்ஸ், அவருடைய மனைவி பேத்ரீஸ் ஆகிய 2 பேர் வந்திருந்தனர்.

பஸ்சில் பல்வேறு வசதிகள்

இருவரும் பயணித்து வந்த பஸ்சில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. வீட்டில் உள்ளது போன்று டைனிங் டேபிள், வாஷ்பேசின், பிரிட்ஜ், சிறிய பீரோ, தூங்குவதற்கான சிறிய அறை இருந்தது. உலக நாடுகளை பஸ்சிலேயே சுற்றிவர வேண்டும் என்று பிரத்தியேகமாக இந்த பஸ்சை தயார் செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்த வெளிநாட்டு தம்பதியருடன், தனுஷ்ேகாடிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஆர்வமாக செல்பி எடுத்துக் கொண்டனர். அந்த வெளிநாட்டு வாகனம் இடதுபுறமாக இருந்து ஓட்டும் வசதி கொண்டது.

ருசிகர பேட்டி

தங்கள் பயணம் குறித்து ஹெயின்ஸ், அவருடைய மனைவி பேத்ரீஸ் ஆகியோர் 'தினத்தந்தி' நிருபரிடம் கூறியதாவது:-

பல்வேறு நாடுகளுக்கு சாலை மார்க்கமாக செல்ல வேண்டும் என ஆசைப்பட்டோம். அதனால் சுவிட்சர்லாந்தில் இருந்து எங்கள் பயணத்தை கடந்த ஆகஸ்டு 1-ந் தேதி தொடங்கினோம். அங்கிருந்து தாய்லாந்து, கம்போடியா, நேபாளம் உள்ளிட்ட பல நாடுகளுக்கு சென்று இந்தியாவிற்குள் வந்தோம்.

டெல்லி உள்ளிட்ட பல முக்கிய நகரங்களுக்கு சென்றுவிட்டு, தமிழகம் வந்தோம். இப்போது தனுஷ்கோடி வந்துள்ளோம். பல நாடுகளுக்கு செல்லும்போது அங்குள்ள மக்களிடம் பழகும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், இந்திய மக்கள் எங்களை கவர்ந்துவிட்டனர்.

இந்திய கலாசாரம், உணவுகள் எங்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. தமிழ்நாட்டில் அனைத்து உணவுகளுமே ருசியாக உள்ளது. ஆனால் கொஞ்சம் காரமாகவும் உள்ளது. மும்பை கடற்கரையை போன்று தனுஷ்கோடி கடலும், கடற்கரையும், அதன் சாலையும் பார்ப்பதற்கு மிக அழகாக உள்ளது. தொடர்ந்து இன்னும் சில நாடுகளுக்கு சென்றுவிட்டு வரும் ஜூலை மாதம் எங்கள் பயணத்தை முடிக்க திட்டமிட்டு உள்ளோம்.

365 நாட்களில் 50 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பயணம் செய்ய திட்டமிட்டு இருக்கிறோம். ஒரு நாளைக்கு மற்ற நாடுகளில் 600 கிலோ மீட்டர் தூரம் வரை பயணித்தோம்.. ஆனால் இந்தியாவில் ஒரு நாளைக்கு 300 கிலோ மீட்டர் மட்டும்தான் ெசல்ல முடிகிறது. பல இடங்களில் சாலை சேதமடைந்துள்ளன. இங்குள்ள வாகன ஓட்டிகள் பலர்,, தாறுமாறாக செல்கிறார்கள். அது எங்களை அச்சப்படுத்துகிறது. இரவில் ஓட்டல்கள், பாதுகாப்பான இடத்தில் பஸ்சை நிறுத்திவிட்டு, அதில் ஓய்வெடுக்கிறோம். தேவையான போது தண்ணீரை வாகனத்தில் நிரப்பிக் கொள்கிறோம். ஒரு முறை நிரப்பிவிட்டால் சில நாட்களுக்கு போதுமானது. மற்றபடி உணவை கடை வீதிகளில் பார்த்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story