கார் வெடிப்பு வழக்கில் கைதானவர் சித்ரவதை: தேசிய புலனாய்வு அமைப்பு பதில் அளிக்க வேண்டும் -ஐகோர்ட்டு


கார் வெடிப்பு வழக்கில் கைதானவர் சித்ரவதை: தேசிய புலனாய்வு அமைப்பு பதில் அளிக்க வேண்டும் -ஐகோர்ட்டு
x

கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதானவரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் தேசிய புலனாய்வு அமைப்பு பதில் அளிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

கோவையில் கடந்தாண்டு நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் கைதான முகமது அசாருதீ்ன், தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தேசிய புலனாய்வு அமைப்பினரால் அசாருதீன் துன்புறுத்தப்பட்டதாகவும், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் எனக் கோரி சென்னை ஐகோர்ட்டில் அசாருதீனின் தந்தை முகமது யூசுப் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதில், "அசாருதீனை தலைகீழாக தொங்க விட்டு தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் அடித்துள்ளனர். இதனால் அவரது உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் உள்ளன. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால் அசாருதீனுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தனர்.

அடி உதை

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சுந்தர், எம்.நிர்மல்குமார் ஆகியோர் கொண்ட அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் புகழேந்தி ஆஜராகி, விசாரணை கோர்ட்டில் மனு தாக்கல் செய்து அசாருதீனை தலை கீழாக கட்டி தொங்க விட்டு அடித்துள்ளனர். தனக்கு நடந்த கொடுமை குறித்து விசாரணை கோர்ட்டு நீதிபதியிடம் அசாருதீன் கூறியுள்ளார். இதையடுத்து அவரை மீண்டும் காவலில் எடுத்து மீண்டும் கொடூரமாக அடித்து உதைத்து தாக்கியுள்ளனர் என்று வாதிட்டார்.

பதில்

இதையடுத்து நீதிபதிகள், புழல் சிறையில் உள்ள அசாருதீனுக்கு இதுவரை அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை தொடர்பான ஆவணங்களை புழல் சிறை அதிகாரிகள் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு உள்ளதால், அவர்களும் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.


Next Story