குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிப்பது அனைவரின் கடமை


குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிப்பது அனைவரின் கடமை
x

குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிப்பது அனைவரின் கடமை

திருப்பூர்

திருப்பூர்

குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிப்பது அனைவரின் கடமையாகும் என்று கலெக்டர் வினீத் அறிவுறுத்தினார்.

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு ஊர்வலம்

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் கையெழுத்து இயக்கம் தொடக்க நிகழ்ச்சி நேற்று காலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. கலெக்டர் வினீத் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

குழந்தை தொழிலாளர் முறை அனைத்து நாடுகளிலும் உள்ளது. குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளில் அதிகமாக காணப்படுகிறது. பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள் மத்தியில் குழந்தை தொழிலால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் ஜூன் மாதம் 12-ந் தேதி கடைபிடிக்கப்படுகிறது. குழந்தைகள் உடல் மற்றும் மனரீதியாக பாதிக்கப்படுகின்றனர். குழந்தை பருவத்தை இழப்பதோடு கல்வியும் பெறமுடியாமல் போகிறது. குழந்தை தொழிலால் வறுமை அதிகரிக்கிறது. மனிதவளம் குன்றிவிடுகிறது.

2 ஆண்டு சிறை

14 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் எந்த பணியிலும் ஈடுபடுத்தக்கூடாது. 14 வயது முதல் 18 வயது நிறைவடையாத வளர் இளம் பருவத்தினரை அபாயகரமான தொழிலில் ஈடுபடுத்தக்கூடாது. சட்டத்துக்கு புறம்பாக பணியாற்றினால் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் அல்லது 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும். நம் பகுதியில் பள்ளி செல்லாத குழந்தைகளை கண்டறிந்து அவர்களை பள்ளியில் சேர்க்க உதவ வேண்டும். குழந்தைகளை பணிக்கு அமர்ந்தும் நிறுவனங்கள், தொழிலகங்கள் குறித்து தொழிலாளர்துறை, சைல்டுலைன் அமைப்பை 1098 தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் ஆகியவற்றுக்கும் தெரிவிக்கலாம்.

குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிப்பது அனைவரின் கடமையாகும். தேசத்தில் மனித வளம் மேம்பட குழந்தைகளின் நலனில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். இதை வலியுறுத்தி இந்த பிரசாரம் நடக்கிறது.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

விழிப்புணர்வு நாடகம்

இதைத்தொடர்ந்து குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு விழிப்புணர்வு நாடகத்தை கலெக்டர் பார்வையிட்டார். பின்னர் கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கி வைத்தார். இதில் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையாளர் (அமலாக்கம்) மலர்கொடி, இணை இயக்குனர் (தொழிற்சாலைகள்) புகழேந்தி மற்றும் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.

-


Next Story