அருவிக்கரையில் சுற்றுலா மேம்பாடு திட்டங்கள் செயல்படுத்த வேண்டும்


அருவிக்கரையில் சுற்றுலா மேம்பாடு திட்டங்கள் செயல்படுத்த வேண்டும்
x

அருவிக்கரையில் சுற்றுலா மேம்பாடு திட்டங்கள் செயல்படுத்த அரசு முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி

திருவட்டார்:

அருவிக்கரையில் சுற்றுலா மேம்பாடு திட்டங்கள் செயல்படுத்த அரசு முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இயற்கை எழில் சூழ்ந்த அருவிக்கரை

திருவட்டாரில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் அருவிக்கரை உள்ளது. இந்த பகுதியில் பாறைகளின் மீது பரந்து விரிந்து பரளியாறு பாய்கிறது.

இந்த ஆற்றின் குறுக்கே தண்ணீரை தேக்கி வைக்க தடுப்பனை ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. இதில் இருந்து விவசாயத்திற்காக அருவிக்கரை இடது மற்றும் வலது கரை கால்வாய்கள் வழியாக தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

அருவிக்கரை ஆற்றில் மழை காலங்களில் அதிகமாவும், மற்ற நாட்களில் மிதமாகவும் தண்ணீர் பாய்ந்து வருகிறது. இதனால், அந்த பகுதி இயற்கை எழில் கொஞ்சும் வகையில் ரம்மியமாக காணப்படுவதால் குமரி மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது, மிதமாக தண்ணீர் பாய்ந்து வரும் அருவிக்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்துவிட்டு செல்கின்றனர்.

போதிய வசதி இல்லை

அருவிக்கரை பகுதியில் பாறைகளுக்கு இடையே சலசலவென பாய்ந்தோடும் தண்ணீரும், சுற்றிலும் பச்சைப்பசேல் என காட்சிதரும் இயற்கையும் காண்போர் மனதைக்கவரும் வகையில் உள்ளது. அருவிக்கரை அருவி அருகிலேயே சப்தமாதர் கோவிலும் உள்ளது. கோவில் அருகில் இருந்து அருவிக்குச் செல்வதற்கு சிமெண்டு நடைபாதை அமைக்கப்படாமல் உள்ளது. அவ்வாறு நடைபாதை அமைக்கப்பட்டால் அருவிக்கு எளிதாக பொதுமக்கள் சென்றுவர முடியும்.

தற்போது போதிய வசதி இல்லாதாதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அருவியை தொலைவில் இருந்து பார்த்து குளிக்க முடியவில்லையே என்ற வருத்தத்துடன் செல்கின்றனர்.

அருவிப்பகுதியை மேம்படுத்தி வசதிகள் செய்யப்படுமானால் இங்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வர வாய்ப்புகள் உள்ளன. அருவிக்கரையில் இருந்து 3 கி.மீ. தொலைவில் மாத்தூர் தொட்டிப்பாலம் உள்ளது. மாத்தூர் தொட்டிப்பாலத்தில் இருந்து பரளியார் ஓடும் அருவிக்கரை வழியாக திருவட்டார் தளியல் முத்தாரம்மன் கோவில் பகுதி வரை பழனி முருகன் கோவிலில் உள்ளது போல் ரோப் கார் வசதி செய்யலாம். அவ்வாறு செய்யப்பட்டால் தொட்டிப்பாலத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் அருவிக்கரை ஆற்றின் இயற்கை அழகை வெகுவாக ரசிக்க முடியும். அதுபோல் அருவிக்கரையின் ஒரு பகுதியில் இருந்து மறுகரைக்கு தொங்குபாலம் அமைத்து சுற்றுலா பயணிகளை கவரலாம்.

பொதுமக்கள் கோரிக்கை

இவற்றின் மூலம் அருவிக்கரை பகுதியை சிறந்த சுற்றுலாதலமாக உருவெடுக்க வாய்ப்புகள் உள்ளன. எனவே, அருவிக்கரையில் சுற்றுலா மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story