வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பங்கேற்ற பொங்கல் விழா
நாஞ்சிக்கோட்டை சாமி கோவில் வளாகத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பங்கேற்ற பொங்கல் விழா நடந்தது.
நாஞ்சிக்கோட்டை வெள்ளைச்சாமி கோவில் வளாகத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பங்கேற்ற பொங்கல் விழா நடந்தது.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்
தமிழ்நாடு சுற்றுலாத்துறை, தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் நேற்று நாஞ்சிக்கோட்டை வெள்ளைச்சாமி கோவில் வளாகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். இந்திய சுற்றுலா துறையின் தென் மண்டல இயக்குனர் முகமது பாரூக் முன்னிலை வைத்தார். விழாவில் சிங்கப்பூர், மலேசியா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, கனடா, பிரேசில், அர்ஜென்டினா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மாட்டு வண்டியில்...
முன்னதாக கலெக்டர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் மாட்டு வண்டியில் ஊர்வலமாக விழா நடைபெறும் இடத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
பின்னர் பாரம்பரிய முறைப்படி மண்பானையில் பொங்கல் வைத்து வழிபட்டனர். இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டுகளான சிலம்பாட்டம், கோலாட்டம், கபடி, கயிறு இழுத்தல் போட்டி, இளவட்டக் கல் தூக்குதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
கலை நிகழ்ச்சிகள்
இதனைத் தொடர்ந்து தப்பாட்டம், மயிலாட்டம், மாடு ஆட்டம், கட்டைக்கால் ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் நெல்சன், நாஞ்சிக்கோட்டை ஊராட்சி தலைவர் சத்யராஜ், இன்டாக் கவுரவ தலைவர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.