கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்; படகு சவாரி செய்து உற்சாகம்


கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்; படகு சவாரி செய்து உற்சாகம்
x
தினத்தந்தி 18 Sept 2023 2:45 AM IST (Updated: 18 Sept 2023 2:45 AM IST)
t-max-icont-min-icon

தொடர் விடுமுறை எதிெராலியாக, கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அங்குள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து உற்சாகம் அடைந்தனர்.

திண்டுக்கல்

தொடர் விடுமுறை எதிெராலியாக, கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அங்குள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து உற்சாகம் அடைந்தனர்.

சுற்றுலா பயணிகள் வருகை

சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். குறிப்பாக வார விடுமுறை, விழாக்கால தொடர் விடுமுறை உள்ளிட்ட நாட்களில் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுவது வழக்கம்.

அந்த வகையில் வார விடுமுறை, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதையொட்டி கொடைக்கானலுக்கு கடந்த 2 நாட்களாக சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்தநிலையில் நேற்று அதிகாலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்தனர். குறிப்பாக கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்தனர்.

ஒரே நேரத்தில் வாகனங்களில் வந்ததால், கொடைக்கானல் நகரின் முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனை போக்குவரத்து போலீசார் சரிசெய்தனர். அதன்பிறகு சுற்றுலா இடங்களை நோக்கி சுற்றுலா பயணிகள் சென்றனர்.

படகு சவாரி

கொடைக்கானல் முக்கிய சுற்றுலா இடங்களான மோயர் பாயிண்ட், கோக்கர்ஸ் வாக், குணாகுகை, பில்லர்ராக், பைன்மரக்காடு, மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம், மதிகெட்டான் சோலை, பேரிஜம் ஏரி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற சுற்றுலா பயணிகள், அங்கு நிலவிய இயற்கை சூழலை அனுபவித்தனர்.

மேலும் தங்களது செல்போன், கேமராக்களில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். குறிப்பாக பில்லர்ராக் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள யானை சிலைகள் முன்பு நின்று புகைப்படம் எடுத்தனர்.

இதைத்தவிர வெள்ளி நீர்வீழ்ச்சி, பியர்சோழா அருவி, பாம்பார் அருவி, தேவதை அருவி உள்ளிட்ட அருவிகளை பார்த்து ரசித்தனர். அத்துடன் பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள் பொழுதுபோக்கினர். மேலும் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் சைக்கிள் சவாரி, குதிரை சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.

பலத்த மழை

இதற்கிடையே கொடைக்கானலில் நேற்று மாலை 4 மணிக்கு மேல் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் இந்த மழை நீடித்தது. அதன்பிறகு சாரல் மழை பெய்தது. இருப்பினும் சுற்றுலா பயணிகள் பலரும் மழையில் நனைந்தபடியே சுற்றுலா இடங்களை கண்டு ரசித்தனர். மேலும் அவ்வப்போது மேகக்கூட்டங்கள் தரையிறங்கி சுற்றுலா பயணிகளின் விழிகளுக்கு விருந்து படைத்தது. அதனை பார்த்து அவர்கள் உற்சாகம் அடைந்தனர்.

கடந்த 2 நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளதால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள வியாபாரிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story