கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
வார விடுமுறையையொட்டி நேற்று கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர்.
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். தற்போது கொடைக்கானலில் 2-வது சீசன் நடைபெற்று வருகிறது. இதையொட்டி சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் நேற்று வாரவிடுமுறையையொட்டி அதிகாலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்தனர். குறிப்பாக வெளிமாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. அப்போது கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, மோயர் பாய்ண்ட், பைன்மரக்காடு, பில்லர் ராக், குணாகுகை உள்ளிட்ட சுற்றுலா தலங்களை பார்வையிட்டு சுற்றுலா பயணிகள் ரசித்தனர். மேலும் சுற்றுலா தலங்களில் அவ்வப்போது நிலவிய மிதமான வெப்பநிலை, மேனிகளில் தவழ்ந்து செல்லும் மேகக்கூட்டங்கள் என இதமான கால நிலையை அனுபவித்து மகிழ்ந்தனர்.
இதேபோல் கொடைக்கானல் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தும், ஏரியை சுற்றி சைக்கிள் மற்றும் குதிரை சவாரி செய்தும் உற்சாகம் அடைந்தனர். வார விடுமுறையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.