மின்சாரம் தாக்கி சுற்றுலா பயணி சாவு
குன்னூர் அருகே உயர் அழுத்த மின்கம்பி மீது வேன் உரசியதில், மின்சாரம் தாக்கி சுற்றுலா பயணி உயிரிழந்தார். மேலும் அவரது நண்பர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
குன்னூர்
குன்னூர் அருகே உயர் அழுத்த மின்கம்பி மீது வேன் உரசியதில், மின்சாரம் தாக்கி சுற்றுலா பயணி உயிரிழந்தார். மேலும் அவரது நண்பர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
சுற்றுலா பயணிகள்
ஈரோடு மாவட்டம் கவுந்தபாடி அருகே சித்தோடு பகுதியை சேர்ந்த 10 பேர், நீலகிரி மாவட்டம் குன்னூருக்கு நேற்று வேனில் சுற்றுலா வந்தனர். அவர்கள் தங்குவதற்கு குன்னூர்-கோத்தகிரி சாலையில் ஹைபீல்டு பகுதியில் உள்ள விடுதியில் அறை எடுத்தனர். அவர்களுடன் சமையல்காரர் மற்றும் டிரைவர் ஆகியோரும் வந்திருந்தனர்.
அனைவரும் வேனில் இருந்து கீழே இறங்கி அறைக்கு செல்ல தயாராகினர். அதற்கு முன்னதாக வேனை சாலையோர வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்த டிரைவர் பின்னோக்கி இயக்கினார். அவருக்கு, திருநாவுக்கரசு(வயது 40) என்பவர் வேனின் படிக்கட்டில் நின்றபடி வழிகாட்டினார்.
மின்சாரம் தாக்கியது
அப்போது திடீரென உயர் அழுத்த மின்கம்பியில் வேனின் மேல் பகுதி உரசியது. இதனால் வேனின் படிக்கட்டில் நின்றிருந்த திருநாவுக்கரசு மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அவரை காப்பாற்ற முயன்ற கார்த்திகேயன்(41), சுதானந்த சீனிவாசன்(42) ஆகியோரையும் மின்சாரம் தாக்கியது.
இதில் பலத்த காயம் அடைந்த 3 பேரும், குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி திருநாவுக்கரசு பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் அனைவரும் 1999-ம் ஆண்டு ஈரோட்டில் உள்ள ஒரு கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள் ஆவர். நீண்ட நாட்கள் கழித்து சந்தித்த நண்பர்கள் சுற்றுலாவுக்கு வந்த இடத்தில், மின் விபத்தில் சிக்கியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து குன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தில் குன்னூர் தாசில்தார் சிவக்குமார் தலைமையில் வருவாய் துறையினர், மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.