மூணாறு தலைப்பை சுற்றுலா மையமாக்க வேண்டும்
நீடாமங்கலம் அருகே உள்ள மூணாறு தலைப்பை சுற்றுலா மையமாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீடாமங்கலம்;
நீடாமங்கலம் அருகே உள்ள மூணாறு தலைப்பை சுற்றுலா மையமாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மூணாறு தலைப்பு
நீடாமங்கலம் அருகே மூணாறு தலைப்பு உள்ளது. இதனை கோரையாறு தலைப்பு என்றும் அழைப்பர். ஆண்டு தோறும் மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் கல்லணைக்கு வரும். இங்கு திறக்கப்படும் தண்ணீர் நீடாமங்கலம் அருகே உள்ள மூணாறு தலைப்பை (கோரையாறு தலைப்பு) வந்தடையும். மூணாறு தலைப்பு அணை திறக்கப்படும் போது அந்த நீரானது வெண்ணாறு, கோரையாறு, பாமணியாறு ஆகிய மூன்று ஆறுகளில் பிரிந்து ஓடி திருவாரூர், நாகை மாவட்ட பாசனத்திற்கு பயன்படும்.
தேக்குமரங்கள்
இந்த மூணாறு தலைப்பு அணைக்கு ஆண்டு தோறும் நீடாமங்கலம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளை சுற்றுலாவாக அழைத்து வந்து ஆசிரியர்கள் காட்டுவார்கள். நீடாமங்கலத்திலிருந்து மூணாறு தலைப்பிற்கு செல்லும் சாலை இருப்புறமும் அடர்ந்த காடுகள் போல் ஏராளமான மரங்கள் உள்ளன. சில நூற்றாண்டுகளை கடந்த தேக்கு மரங்கள் அணை பகுதியில் கம்பீரமாக இன்றும் நிற்கிறது.
சுற்றுலா மையமாக்க வேண்டும்
மூணாறு தலைப்பை சுற்றுலா மையமாக்குவோம் என கடந்த காலத்தில் தமிழக அரசு அறிவித்தது. இந்த மூணாறு தலைப்பின் அருகில் தான் இருவழிச்சாலை வருகிறது. மூணாறு தலைப்பை சுற்றுலா மையமாக்கினால் ஆலங்குடி குருபரிகார கோவிலுக்கு வரும் பக்தர்கள், வேளாங்கண்ணி மாதாகோவிலுக்கு வரும் பக்தர்கள், நாகூர் ஆண்டவர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் என அனைவரும் இந்த பகுதியை பார்வையிட வாய்ப்பாக அமையும். எனவே மூணாறு தலைப்பு அணையை சுற்றுலா மையமாக்க வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.