சுற்றுலா வேன் கவிழ்ந்து 5 பேர் படுகாயம்


சுற்றுலா வேன் கவிழ்ந்து 5 பேர் படுகாயம்
x

கோத்தகிரி அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து 5 பேர் படுகாயம் அடைந்தனர்

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

கட்டுப்பாட்டை இழந்தது

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள குப்பனூர் பகுதியில் இருந்து நேற்று அதிகாலையில் ஊட்டிக்கு சுற்றுலா வேன் ஒன்று சென்றது. அதில் 4 குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் உள்பட 13 பேர் இருந்தனர். அந்த வேனை திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள பன்னாடு பகுதியை சேர்ந்த மோகன்ராஜ்(வயது 27) என்பவர் ஓட்டினார்.

அவர்கள் ஊட்டியில் சுற்றுலா தலங்களை கண்டு ரசித்துவிட்டு, இரவில் கோத்தகிரி வழியாக சேலம் நோக்கி புறப்பட்டனர். கட்டபெட்டு பஜாரில் வந்தபோது, பிரேக் போட டிரைவர் முயற்சித்தார். ஆனால் திடீரென வேன் அவரது கட்டுப்பாட்டை இழந்தது.

5 பேர் படுகாயம்

தொடர்ந்து சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 3 கார்கள் மீது மோதியதோடு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் வேனுக்குள் இருந்த சுற்றுலா பயணிகள் பயத்தில் அலறினர். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, அவர்களை மீட்டனர். இந்த விபத்தில் சத்யா(35), லாவண்யா(29), தியாகராஜன்(31), கலைச்செல்வி(50), அலமேலு(50) ஆகிய 5 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் சந்தியா(17), சேகர்(43), சிவானி(6), தினேஷ் குமார்(18), விஷால்(16), நிரஞ்சன்(7), ஜெயசுதாகர்(48), லசித்தா(10) ஆகியோர் லேசான காயங்களுடன் தப்பினர். அவர்களுக்கு கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

விசாரணை

கட்டபெட்டு பஜாரில் பகலில் எப்போதும் வாகன மற்றும் மக்கள் நெருக்கடி மிகுந்து இருக்கும். எனினும் இரவு நேரம் என்பதால், விபத்து நடந்த சமயத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

கட்டுப்பாட்டை இழந்த வேன், கார்கள் மீது மோதி நின்றதால், அதிர்ஷ்டவசமாக சாலையோரம் உள்ள 50 அடி ஆழ பள்ளத்தில் விழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து குறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story