கொடைக்கானலில் சுற்றுலா வேன்கள் மோதல்; டிரைவர் பலி-20 பேர் படுகாயம்
கொடைக்கானலில் சுற்றுலா வேன்கள் மோதிக்கொண்ட விபத்தில் டிரைவர் பலியானார். சுற்றுலா பயணிகள் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
கொடைக்கானலில் சுற்றுலா வேன்கள் மோதிக்கொண்ட விபத்தில் டிரைவர் பலியானார். சுற்றுலா பயணிகள் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
தூத்துக்குடி சுற்றுலா பயணிகள்
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுவது வழக்கம். அந்த வகையில் நேற்று சுதந்திர தின விடுமுறையையொட்டி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வந்திருந்தனர்.
அதன்படி தூத்துக்குடி காதர்மீரா நகரை சேர்ந்த சிறுவர்கள் உள்பட 15 பேர் கொடைக்கானலுக்கு சுற்றுலா வேனில் வந்திருந்தனர். அந்த வேனை அதே பகுதியை சேர்ந்த சுப்பையா (வயது 40) என்பவர் ஓட்டினார். கொடைக்கானல் வந்தடைந்ததும், அவர்கள் வனப்பகுதியில் உள்ள ஒவ்வொரு சுற்றுலா இடங்களாக சென்றனர்.
கொடைக்கானல் பைன்மரக்காடு பகுதிக்கு வந்தவுடன் அவர்கள் வேனை சாலையோரமாக நிறுத்திவிட்டு, சுற்றுலா இடத்தை கண்டுகளிக்க சென்றனர். அப்போது வேனில் சுப்பையாவும், ஒருசிலரும் அமர்ந்திருந்தனர். மற்றவர்கள் சுற்றுலா இடத்தில் இருந்தனர்.
டிரைவர் பலி
இந்தநிலையில் விழுப்புரத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் மற்றொரு வேனில் கொடைக்கானலுக்கு வந்தனர். அந்த வேனை விழுப்புரத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் ஓட்டினார். இந்த வேன் பைன்மரக்காடு பகுதியில் வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. ஒருகட்டத்தில் அந்த வேன் அங்கு சாலையோரம் நின்றிருந்த தூத்துக்குடி சுற்றுலா பயணிகளின் வேனின் பின்புறம் பயங்கரமாக மோதியது.
இதில், தூத்துக்குடி சுற்றுலா பயணிகளின் வேன் சாலையில் கவிழ்ந்தது. அப்போது வேனுக்குள் அமர்ந்திருந்த டிரைவர் சுப்பையா, முன்பக்க கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியே தூக்கி வீசப்பட்டார். இதில், படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
20 பேர் படுகாயம்
இதற்கிடையே நிற்காமல் தறிகெட்டு ஓடிய விழுப்புரம் சுற்றுலா வேன், சாலையோரம் நின்றிருந்த கார்கள் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் 2 சுற்றுலா வேன்களிலும் இருந்த ரவீந்திரன் (32), ரேவதி (30), தனலட்சுமி (40), தேவகி (39), தேவி (41), தயாநிதி (11), விக்னேஷ் (27) உள்பட 20 பயணிகள் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கொடைக்கானல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். போலீசாருக்கு அங்கு நின்று கொண்டிருந்த மற்ற சுற்றுலா பயணிகளும் உதவினர். படுகாயம் அடைந்த 20 பேரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கிருந்து ரவீந்திரன், ரேவதி, தனலட்சுமி, தேவகி ஆகிய 4 பேர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து காரணமாக பைன்மரக்காடு பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பின்னர் போக்குவரத்தை போலீசார் சரிசெய்தனர்.