ராமேசுவரம் நகருக்குள் சுற்றுலா வாகனங்கள் செல்ல தடை
போக்குவரத்து நெருக்கடியை தடுப்பதற்காக ராமேசுவரம் நகரின் லெட்சுமணதீர்த்தம் முதல் மேற்குரத வீதி வரை ஒருவழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டன. இதனால் நகருக்குள் சுற்றுலா வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ராமேசுவரம்,
போக்குவரத்து நெருக்கடியை தடுப்பதற்காக ராமேசுவரம் நகரின் லெட்சுமணதீர்த்தம் முதல் மேற்குரத வீதி வரை ஒருவழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டன. இதனால் நகருக்குள் சுற்றுலா வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
போக்குவரத்து நெருக்கடி
கடந்த ஒரு வாரமாகவே தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டு உள்ளதால் ராமேசுவரம் கோவிலுக்கும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் கடந்த 5 நாட்களுக்கு மேலாகவே ராமேசுவரம் லெட்சுமண தீர்த்தம் முதல்ராம தீர்த்தம், திட்டக்குடி சந்திப்பு சாலை, மேற்குரத வீதி சாலை, தனுஷ்கோடி சாலை என நகரில் எந்த பகுதியில் பார்த்தாலும் அதிகமான சுற்றுலா வாகனங்களால் நகரம் முழுவதும் கடும் போக்குவரத்து நெருக்கடி இருந்து வருகின்றது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
ஒருவழிப்பாதை
இதனிடையே சுற்றுலா வாகனங்கள் அதிகரிப்பு காரணமாக உள்ள போக்குவரத்தை நெருக்கடியை தவிர்ப்பதற்காக ராமேசுவரம் நகரில் நேற்று முதல் நகருக்குள் சுற்றுலா வாகனங்கள் செல்ல போலீசார் தடை விதித்து ஒருவழிப்பாதை சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. சோதனை ஓட்டமானது துணை சூப்பிரண்டு தனஞ்ஜெயன் மற்றும் நகர சபை சேர்மன் நாசர் கான் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
வெளியூர்களில் இருந்து ராமேசுவரம் வந்த கார், வேன் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் ராமேசுவரம் பஸ் நிலைய சாலை வழியாக வந்து நகருக்குள் அனுமதிக்கப்படாமல் சிவகாமி நகர், சல்லிமலை, கியாஸ் குடோன், சம்பை சாலை வழியாக ஜே.ஜே.நகரில் உள்ள நகராட்சி வாகன நிறுத்தும் இடத்திற்கு அனுப்பப்பட்டது.
கோவிலை முடித்து புறப்பட்ட வாகனங்கள் ஜே.ஜே.நகர் வாகன நிற்கும் இடத்தில் இருந்து புறப்பட்டு ஆஞ்சநேயர் கோவில் சாலை, மேல ரத வீதி, நடுத்தெரு, திட்டக்குடி சந்திப்பு சாலை வழியாக பஸ் நிலையத்திற்கும் அனுப்பப்பட்டது. அதுபோல் தனுஷ்கோடி செல்ல வேண்டிய வாகனங்கள் திட்டக்குடியில் இருந்து தனுஷ்கோடிக்கும் திருப்பி விடப்பட்டது.
தங்கும் விடுதி உரிமையாளர்கள் எதிர்ப்பு
சுற்றுலா வாகனங்கள் நகருக்குள் அனுமதிக்கப்படாததால் தங்கும் விடுதி உரிமையாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நடைமுறைக்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
வெளியூர்களில் இருந்து வந்த அனைத்து சுற்றுலா வாகனங்களும் மற்றும் ஆட்டோக்களும் லட்சுமண தீர்த்தம், ராம தீர்த்தம், திட்டக்குடி சந்திப்பு சாலை மேற்குரத வீதி வழியாக கோவில் பகுதிக்கு அனுமதிக்க படவில்லை.அது போல் ராமேசுவரம் நகர் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றுவதற்கும் குறிப்பாக முக்கிய சந்திப்பு சாலையான திட்டக்குடி சந்திப்பு சாலைகளில் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்கும் வகையில் அந்த பகுதிகளை இன்னும் அகலப்படுத்துவதற்கும் மற்றும் நகருக்குள் அரசு பஸ்களை முழுமையாக அனுமதிக்காமல் பஸ் நிலையம், கோவில், தனுஷ்கோடி, ராமர் பாதம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு சார்பில் ஏராளமான மினி பஸ்களை இயக்கினால் ராமேசுவரம் நகரில் போக்குவரத்து நெருக்கடிகள் அதிக அளவில் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.