ஏற்காடு, மேட்டூரில் குவிந்த சுற்றுலா பயணிகள்


ஏற்காடு, மேட்டூரில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று ஏற்காடு, மேட்டூரில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

சேலம்

மேட்டூர்

ஏற்காடு

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் கடந்த வாரம் 45-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெற்றது. இதை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டுக்கு வந்தனர். கோடை விழா முடிந்த பிறகும், தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டுக்கு வந்த வண்ணம் உள்ளனர். விடுமுறை நாளான நேற்றும் ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்தனர்.

படகு சவாரி

குறிப்பாக சேர்வராயன் கோவில், லேடிஸ் சீட், ஜென்ட்ஸ் சீட், ரோஜா தோட்டம், படகு இல்லம், அண்ணா பூங்கா, கிளியூர் நீர்வீழ்ச்சி ஆகிய இடங்களுக்கு சென்று மகிழ்ந்தனர். மேலும் படகு குழாமில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

அதே நேரத்தில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் ஏற்காட்டிற்கு வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முக்கிய சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கிளியூர் நீர்வீழ்ச்சி, லேடிஸ் சீட், ரோஜா தோட்டம் ஆகிய பகுதிகளில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் சுமார் 2 மணி நேரம் வாகனங்கள் சாலையிலேயே நிறுத்தப்பட்டன.

சுற்றுலா பயணிகள் அவதி

ஏற்காட்டில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து காணப்பட்டது. பிற்பகல் 3 மணியளவில் கரு மேகம் சூழ்ந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். உணவகங்களில் உணவு கிடைக்காமல் சுற்றுலா பயணிகள் பலர் அவதிப்பட்டனர்.

மேலும் வாகனங்கள் நிறுத்த இடம் இல்லாததால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதன் காரணமாக நடந்து செல்வதற்கு கூட சுற்றுலா பயணிகள் சிரமம் அடைந்தனர்.

மேட்டூர்

இதேபோல் விடுமுறை நாளான நேற்று மேட்டூருக்கு சுற்றுலா பயணிகள் அதிகாலையிலேயே வரத்தொடங்கினர். இவர்களில் ஒரு சிலர் மேட்டூர் பூங்காவையொட்டி அமைந்துள்ள அணைக்கட்டு முனியப்பன் சாமி கோவிலுக்கு சென்று ஆடு, கோழி ஆகியவற்றை பலியிட்டு பொங்கல் வைத்து சாமியை வழிபட்டு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.

ஒரு சிலர் அணைக்கட்டு முனியப்பன் கோவில் அருகே உள்ள காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர். இதன் காரணமாக மேட்டூர் அணைக்கட்டு முனியப்பன் கோவில் காவிரி ஆற்றுப்படித்துறை மற்றும் பூங்கா என எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டமாக காட்சி அளித்தது.

சிறுவர்-சிறுமிகள் கூட்டம்

குறிப்பாக நேற்று பூங்காவில் ராட்டினம், சர்க்கிள், சீசா பலகை போன்ற விளையாட்டு சாதனங்களில் சிறுவர்-சிறுமிகள் கூட்டம் அலைமோதியது. இதே போன்று அணையின் வலது கரை பகுதியில் அமைந்துள்ள பவளவிழா கோபுரம் பகுதியிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அந்த பகுதிக்கு சென்று அணையின் தோற்றத்தை கண்டு கழித்து வீடு திரும்பினார்கள்.

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததன் காரணமாக மேட்டூர் அணை பூங்கா எதிரே அமைந்துள்ள வாகன நிறுத்துமிடம் இடத்தில் வாகனங்கள் நிரம்பின. இதனால் மேட்டூர் பூங்காவில் இருந்து கொளத்தூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள கால்வாய் கரையை ஒட்டி நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிறுத்தப்பட்டிருந்தன.சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததன் எதிரொலியாக மேட்டூர் போலீசார் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.


Next Story