மேட்டூரில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் மேட்டூரில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
மேட்டூர்
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் மேட்டூரில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
கோடை விடுமுறை
சேலம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக மேட்டூர் விளங்கி வருகிறது. இங்கு வார விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் நேற்று மேட்டூரில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
அவர்கள் அணைக்கட்டு முனியப்பன் கோவில் அருகே காவிரி ஆற்றில் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க ஆனந்தமாக குளித்தனர். பின்னர் மேட்டூர் அணை பூங்காவிற்கு சென்று, பொழுதை கழித்தனர். மேலும் அங்கு குடும்பத்தினர், நண்பர்களுடன் தாங்கள் கொண்டு வந்த உணவை சுவைத்தனர்.
மகிழ்ச்சி
சிறுவர்-சிறுமிகள் பூங்காவில் உள்ள விளையாட்டு சாதனங்களில் உற்சாகமாக விளையாடினர். சிலர் வலதுகரை பகுதியில் உள்ள பவள விழா கோபுரத்துக்கு சென்று, அணையின் முழு தோற்றத்தை கண்டு ரசித்தனர். மேட்டூரில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் பூங்கா மற்றும் பவள விழா நுழைவு கட்டணமாக நேற்று ஒரே நாளில் ரூ.79 ஆயிரத்து 855 வசூல் ஆனது.
மேலும் ஓட்டல்கள், மீன் கடைகள் மற்றும் சாலையோர மீன் வறுவல் கடைகளில் விற்பனை மும்முரமாக நடந்தது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சுற்றுலா பயணிகள் வரவால் மேட்டூர் போலீசார், தீயணைப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.