சுற்றுலா பயணிகள் மலை ரெயிலில் பயணிக்க ஆர்வம்
குன்னூரில் கடுங்குளிரிலும் சுற்றுலா பயணிகள் மலை ரெயிலில் பயணிக்க ஆர்வம் காட்டினர்.
குன்னூர்,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பட்ட மலை ரெயிலில் உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே நீர்வீழ்ச்சிகள், குகைகள், அடர்ந்த வனப்பகுதிகள், வனவிலங்குகளை கண்டு ரசிக்கலாம். இதனால் ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகள் கூட்டம் மலை ரெயிலில் காணப்படுகிறது. கடந்த 2 நாட்களாக மாண்டஸ் புயல் காரணமாக குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் பனிமூட்டம் காரணமாக கடுங்குளிர் நிலவுகிறது. இந்தநிலையில் நேற்று கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் குன்னூர் ரெயில் நிலையத்தில் மலை ரெயிலுக்காக சுற்றுலா பயணிகள் காத்திருந்தனர். அவர்கள் குளிரை போக்க கம்பளி ஆடைகளை அணிந்தபடியும், மழையில் நனையாமல் இருக்க குடைகளை பிடித்தபடியும் வந்தனர். பின்னர் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு மலை ரெயில் வந்தது. அந்த ரெயிலில் ஏறி சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு சென்றனர். இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது, மாறுபட்ட காலநிலையில் மலை ரெயிலில் பயணிப்பது குதூகலமாக உள்ளது என்றனர்.