முத்துப்பேட்டை அலையாத்திக்காட்டுக்கு இன்று முதல் சுற்றுலா பயணிகள் செல்ல தடை
முத்துப்பேட்டை அலையாத்திக்காட்டுக்கு இன்று முதல் சுற்றுலா பயணிகள் செல்ல தடை
புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக முத்துப்பேட்டை அலையாத்திக்காட்டுக்கு இன்று (வியாழக்கிழமை) முதல் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்து வனத்துறை அலுவலர் ஜனனி உத்தரவிட்டுள்ளார்.
அலையாத்திக்காடு
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்திக்காடு ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரிய பரப்பளவு கொண்ட காடாகும். இந்த காட்டின் அழகை ரசிக்க ஆண்டு முழுவதும் தமிழகம் மட்டுமன்றி இந்தியாவில் பல்வேறு பகுதியில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மாண்டஸ் புயல் எதிரொலியாக கடந்த 9-ந்தேதி முதல் மறுஅறிவிப்பு வரும் வரை முத்துப்பேட்டை அலையாத்திக்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடைவிதித்து வனத்துறை அறிவித்தது. இதனால் சுற்றுலா பயணிகள் அலையாத்திக்காட்டுக்கு வருவதை தவிர்த்தனர்.
சுற்றுலா பயணிகள் வருகை
தற்போது சகஜமான சூழ்நிலை நிலவுவதால் கடந்த 18-ந்தேதி முதல் மீண்டும் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் அனுமதித்தனர். தகவல் அறிந்ததும் உள்ளூர் மட்டுமின்றி தொலைதூரத்திலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் அலையாத்திகாட்டிற்கு அழைத்து செல்லும் வனத்துறையின் ஜாம்புவானோடை படகு துறையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அப்போது அங்கு நிறுத்தி வைத்திருந்த படகுகளில் சுற்றுலா பயணிகள் ஏறி அலையாத்திக்காடுகளை சுற்றி பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்.
இன்று முதல் தடை
புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இன்று(வியாழக்கிழமை) முத்துப்பேட்டை அலையாத்திக்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது என வனச்சரக அலுவலர் ஜனனி உத்தரவிட்டுள்ளார்.