புல்வெளி மைதானத்தில் நுழைய சுற்றுலா பயணிகளுக்கு தடை
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சீரமைப்பு பணி நடப்பதால் பெரிய புல்வெளி மைதானத்தில் நுழைய சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
ஊட்டி
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சீரமைப்பு பணி நடப்பதால் பெரிய புல்வெளி மைதானத்தில் நுழைய சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
சீரமைப்பு பணி
நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதத்தில் வரும் கோடை சீசனில் சுமார் 8 லட்சம் பேர் வந்து செல்வார்கள். தற்போது கோடை சீசன் நெருங்கிய நிலையில், நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பூங்காக்களையும் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மலர் செடிகள் நடவு செயயப்பட்டுள்ள நிலையில், செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது, உரமிடுவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதேபோன்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிலும் மலர் செடிகள் பராமரிப்பு பணிகள், புல் தரை பராமரிப்பு பணிகள் துரித கதியில் நடந்த வருகிறது. கடந்த வாரம் முதல் பூங்காவில் உள்ள புல்வெளி மைதானங்களை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்காலிக தடை
தற்போது சிறிய புல்வெளி மைதானத்தில் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அங்கு தண்ணீர் பாய்ச்சி புற்கள் வளர்க்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. மேலும் மைதானத்தை சமன் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் சென்றால் இடையூறு ஏற்படும் என்பதால், தற்போது சிறிய புல்வெளி மைதானத்திற்குள் சுற்றுலா பயணிகள் செல்ல அதிகாரிகளால் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டு உள்ளது. பெரிய புல்வெளி மைதான சீரமைப்பு பணிகள் இன்னும் தொடங்கப்படாத நிலையில், பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் தற்போது பெரிய புல் மைதானத்திற்குள் சென்று ஓய்வு எடுத்து வருகின்றனர். சீரமைப்பு பணிகள் முடிந்த பின்னர் வழக்கம் போல் சிறிய புல்வெளி மைதானத்திலும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள்.