பாலருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை
தண்ணீர் வரத்து குறைந்ததால் பாலருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
செங்கோட்டை:
கேரள மாநிலம் ஆரியங்காவு பாலருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழுகிறது. இதனால் இங்கு எப்போதும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் செல்வது வழக்கம். இங்குள்ள வனப்பகுதியில் காட்டு விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். தற்போது போதிய மழை இல்லாததால் அருவியில் தண்ணீர் வரத்து குறைந்தது. மேலும் குற்றாலம் மற்றும் ஐந்தருவிகளில் தண்ணீர் குறைய தொடங்கியுள்ளதையடுத்து சுற்றுலா பயணிகளின் வருகை பாலருவிக்கு அதிகரிக்கு வாய்ப்பு உள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள அரியவகை வனவிலங்குகள் ஆபத்து வரலாம் என வனத்துறையினர் கருதி பாலருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்து உள்ளனர்.
இதன்படி நேற்று மாலையுடன் வருகிற மே மாத இறுதிவரை பாலருவிக்கு செல்லவோ, அருவியில் குளிக்கவோ சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வனவிலங்குகள் கோடை காலத்தில் பாலருவியில் விழும் குறைந்தளவு தண்ணீரை குடிக்க அருவி பகுதிக்கு படையெடுத்து வரும் என்பதை கருத்தில் கொண்டு வனத்துறையினர் முன்னெச்சரிக்கையாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து, நுழைவு பகுதியில் கேட்டால் மூடியுள்ளனர்.