கல்லணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தண்ணீர் திறக்கப்பட்டதாலும், பள்ளிகள் விடுமுறை என்பதாலும் கல்லணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
திருக்காட்டுப்பள்ளி
தமிழகத்தில், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வெயில் கொளுத்தி வருகிறது. அக்னி நட்சத்திர நாட்களில் 100 டிகிரிக்கும் மேலாக பதிவானது. இதன் காரணமாக பொதுமக்களில் சிலர் தங்களது வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். வேலைக்கு செல்பவர்கள், பொது இடங்களுக்கு செல்பவர்கள், உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு செல்பவர்கள் வெயிலால் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக வாகனங்களில் செல்பவர்கள் வியர்வையில் நனைந்து வருகின்றனர்.வெயிலின் கொடுமையால் தண்ணீர் தாகம் ஏற்படும்போது அவர்கள் குளிர்ந்த தண்ணீர், பழரசம், மோர், இளநீர் போன்றவற்றை வாங்கி அருந்தி தாகம் தீர்த்து வருகின்றனர்.
சுற்றுலா தலம்
கோடை வெயில் காரணமாக தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் சிலர் தங்களது குழந்தைகளை அழைத்துக்கொண்டு ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற குளிர்ச்சியான இடங்களுக்கும், வேளாங்கண்ணி, திருச்செந்தூர் போன்ற கடற்கரை உள்ள இடங்களுக்கும், நீர்நிலைகள் உள்ள இடங்களுக்கும் சுற்றுலா சென்று வருகின்றனர்.
அந்தவகையில் தஞ்சை மற்றும் திருச்சி மாவட்டங்களுக்கு மைய பகுதியில் உள்ள சுற்றுலா தலமான கல்லணைக்கு சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர்.தற்போது மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கல்லணையை அடைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் கல்லணைக்கு படையெடுத்து வருகின்றனர்.
குளித்து மகிழ்கின்றனர்
இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள காவிரியில் ஓடும் சிறிதளவு தண்ணீரில் குளித்து மகிழ்கின்றனர். சிலர், கல்லணை பாலத்திலிருந்து காவிரியில் தண்ணீர் வெளியேறும் அழகையும், கரிகாலன் பூங்கா, கரிகாலன் மணி மண்டபம் ஆகியவற்றை பார்வையிட்டனர்.
மேலும், அங்குள்ள சிறுவர் பூங்காவில் ஏராளமான சிறுவர்-சிறுமிகள் திரண்டு ராட்டினம் மற்றும் விளையாட்டு உபகரணங்களில் விளையாடி மகிழ்ந்தனர். இதனால், கல்லணை களைகட்டி வருகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் கல்லணையி் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். பொதுப்பணித் துறையினரும், தோகூர் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்