நுழைவு வரி ரசீது வழங்காததால் சுற்றுலா பயணிகள் அதிருப்தி


நுழைவு வரி ரசீது வழங்காததால் சுற்றுலா பயணிகள் அதிருப்தி
x

தமிழக-கேரள எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் நுழைவு வரி வசூலித்தும், உரிய ரசீது வழங்காததால் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.

நீலகிரி

கூடலூர்,

தமிழக-கேரள எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் நுழைவு வரி வசூலித்தும், உரிய ரசீது வழங்காததால் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.

நுழைவு வரி வசூல்

நீலகிரி மாவட்டம் இயற்கை காட்சிகளை தன்னகத்தே கொண்ட மலைப்பிரதேசம். இதனால் கேரளா, கர்நாடகா உள்பட வெளிமாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கூடலூர் பகுதியில் கேரள, கர்நாடக மாநில எல்லைகள் உள்ளது.

இதனால் 3 மாநிலங்கள் இணையும் பகுதி என்பதால் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இது தவிர ஏராளமான சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் இயக்கப்படுவதால் மாநில எல்லைகளில் நுழைவு வரி வசூலிக்கப்படுகிறது. கூடலூர்-கர்நாடக எல்லையில் கக்கனநல்லா, கேரள எல்லைகளில் நாடுகாணி, நம்பியார்குன்னு, கக்குண்டி, பாட்டவயல், தாளூர், சோலாடி ஆகிய சோதனை சாவடிகளில் ஊழியர்கள் நுழைவு வரி வசூலித்து வருகின்றனர்.

ரசீது வழங்காததால் அதிருப்தி

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் மலர் கண்காட்சிகள் மற்றும் கோடை விழாக்கள் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு அலங்காரங்களை கண்டு ரசித்தனர். இதனால் சாலைகளில் வாகன போக்குவரத்து நெருக்கடி அதிகரித்தது. இந்தநிலையில் வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் மற்றும் தனியார் வாகன ஓட்டிகளிடம் நுழைவு வரி வசூலிக்கும் பணி மும்முரமாக நடைபெற்றது. ஆனால், நுழைவு வரி வசூலிக்கப்பட்டும் ரசீது வழங்கப்படவில்லை என புகார் எழுந்து உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சுற்றுலா வந்த பயணிகள் நுழைவு வரி செலுத்தினர். ஆனால், அதற்கான ரசீது வழங்க வில்லை. இதனால் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி விட்டு சென்றனர். சில சமயங்களில் சோதனை சாவடிகளில் வாக்குவாதம் ஏற்படுகிறது. இதை வாகன ஓட்டிகள் சிலர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, நுழைவு வரி வசூலித்தும், ரசீது வழங்காமல் சுற்றுலா பயணிகளை அனுப்பும் வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. இதே நிலை தொடர்வதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். எனவே, அதிகாரிகள் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story