கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்; போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ் வாகனங்கள்
வாரவிடுமுறையையொட்டி கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர். போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வாரவிடுமுறையையொட்டி கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர். போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதயத்தை வருடும் இதமான சூழல்
சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். வார விடுமுறை, தொடர் விடுமுறை நாட்களில் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுவது வழக்கம்.
தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடைகாலத்தை மிஞ்சும் வகையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெயிலுக்கு இதமான சூழல் நிலவும் கோடைவாசஸ்தலங்களை தேடி செல்கின்றனர். அந்த வகையில் நேற்று வார விடுமுறை என்பதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்தனர்.
கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் இதயத்தை வருடும் இதமான வானிலை நிலவுகிறது. இதனை அனுபவித்தபடி சுற்றுலா பயணிகள், சுற்றுலா இடங்களை பார்த்து மகிழ்ந்தனர்.
பிரமாண்ட யானை சிலைகள்
குறிப்பாக வனப்பகுதிகளில் உள்ள மோயர் பாயிண்ட், பைன்மரக்காடு, குணாகுகை, பேரிஜம் ஏரி, மதிக்கெட்டான் சோலை, தொப்பித்தூக்குப்பாறை, மன்னவனூரில் உள்ள சூழல் சுற்றுலா மையம் உள்ளிட்ட சுற்றுலா இடங்களிலும், பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
கொடைக்கானல் பில்லர்ராக் பகுதியில் பிரமாண்ட யானை சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த சிலைகளின் முன்பு சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
தரை இறங்கிய மேக கூட்டம்
சுற்றுலா இடங்களின் எழில் கொஞ்சும் காட்சிகளை கண்டு சுற்றுலா பயணிகள் ரசித்தனர். கொடைக்கானலின் கொள்ளை அழகில் மயங்கி, விண்ணில் இருந்து மண்ணுக்கு இறங்கி வருகிறதோ என்று சொல்லும் அளவுக்கு மலை முகடுகளில் மேக கூட்டங்கள் இறங்கின.
தரையில் இறங்கி, பள்ளத்தாக்கில் தள்ளாடிய மேக கூட்டங்கள் சுற்றுலா பயணிகளின் விழிகளுக்கு விருந்து படைத்தது. முகடுகளை முத்தமிட்ட மேக கூட்டத்தை சுற்றுலா பயணிகள் தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்தனர்.
இதேபோல் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஏரிச்சாலையில் சைக்கிள் மற்றும் குதிரை சவாரி செய்தும் உற்சாகம் அடைந்தனர்.
ஆம்புலன்ஸ் வாகனங்கள்
நேற்று அதிகாலை முதலே ஏராளமான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வந்தனர். ஒரேநேரத்தில் வாகனங்கள் அதிக அளவில் வந்ததால் நகரின் முக்கிய இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
குறிப்பாக ஏரிச்சாலை, மூஞ்சிக்கல், அப்சர்வேட்டரி, அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதற்கிடையே 2 ஆம்புலன்ஸ் வாகனங்கள் பூம்பாறை, மன்னவனூர் ஆகிய மலைக்கிராமங்களில் வசிக்கும் கர்ப்பிணிகளை ஏற்றி வருவதற்காக சென்று கொண்டிருந்தது.
அந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள், ஏரிச்சாலையில் வந்தபோது போக்குவரத்து நெரிசலில் சிக்கின. அங்கு போக்குவரத்து போலீசார் இல்லாததால் ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஏரிச்சாலையை கடந்து செல்ல முடியாமல் சுமார் அரை மணி நேரமாக வரிசையில் 'சைரன்' ஒலியை எழுப்பியபடி நின்றன.
இதனை பார்த்த பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி, ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு வழிவிட்டனர். அதன்பிறகு மலைக்கிராமங்கள் நோக்கி ஆம்புலன்ஸ் வாகனங்கள் சென்றன. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.