கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்


கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 27 Aug 2023 9:00 PM GMT (Updated: 27 Aug 2023 9:00 PM GMT)

இதயத்தை வருடும் இதமான சூழல் நிலவுவதால், கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர்.

திண்டுக்கல்

சுற்றுலா பயணிகள் படையெடுப்பு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. அதில் இருந்து தப்பிக்க 'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.

குறிப்பாக வார விடுமுறை மற்றும் கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறையை கழிக்க சுற்றுலா பயணிகள்கொடைக்கானலுக்கு நேற்று குவிந்தனர். தமிழகம், கேரளா மட்டுமின்றி வெளிமாநில சுற்றுலா பயணிகளும் வருகை தந்தனர்.

நேற்று காலை முதலே மிதமான வெப்பத்துடன், இதயத்தை வருடும் குளிர்ந்த இதமான சீதோஷ்ண நிலை நிலவியது. இதனை சுற்றுலாப்பயணிகள் அனுபவித்து மகிழ்ந்தனர்.

படகு சவாரி

வனப்பகுதிகளில் உள்ள மோயர் பாயிண்ட், பைன் மரக்காடு, பில்லர் ராக், குணா குகை, மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம், பேரிஜம் ஏரி ஆகிய சுற்றுலா இடங்களுக்கு சென்று கண்டு ரசித்தனர்.

பின்னர் நகர் பகுதியில் உள்ள பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட இடங்களை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். மேலும் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் குடும்பத்துடன் படகு சவாரி செய்து உற்சாகம் அடைந்தனர்.

ஏரியை சுற்றி சைக்கிள் மற்றும் குதிரை சவாரி செய்து ஆனந்தம் அடைந்தனர். சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பால் சுற்றுலா தொழில் புரிவோரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இன்னும் சில நாட்கள் கேரள மாநில சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. இதனால் கூடுதல் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


Related Tags :
Next Story