கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
இதயத்தை வருடும் இதமான வானிலை நிலவுவதால், கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்துள்ளனர்.
தரை இறங்கிய மேககூட்டம்
சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு, விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. அதன்படி கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறைையயொட்டி சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு வெளிமாநில சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த 2 நாட்களாக சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிமாக உள்ளது.
கொடைக்கானலில் நேற்று காலை முதலே மிதமான வெப்பத்துடன் கூடிய குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. இதுமட்டுமின்றி, 'மலைகளின் இளவரசி'யை முத்தமிடும் வகையில் மேக கூட்டம் தரை இறங்கியது.
இதமான வானிலை
நிலைகுலைய செய்யும் பள்ளத்தாக்கில் விழுந்த மேக கூட்டம், மேலே எழ முடியாமல் தத்தளித்த காட்சி சுற்றுலா பயணிகளின் விழிகளுக்கு விருந்து படைத்தது.
இமைகளை மூடுவதே விழிகளுக்கு சுமையாக தோன்றும் வகையில், அங்கு கொட்டி கிடக்கும் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். இயற்கை அன்னையின் அளப்பரிய அருட்கொடை ஒருபுறம் இருக்க, இதயத்தை வருடும் இதமான வானிலையும் கொடைக்கானலை ஆக்கிரமித்தது.
மிதமான வெப்பம், குளிர் ஆகியவற்றை சுற்றுலா பயணிகள் நேற்று அனுபவித்து மகிழ்ந்தனர். குறிப்பாக வனப்பகுதிகளில் உள்ள மோயர் பாயிண்ட், பைன் மரக்காடுகள், பில்லர் ராக், குணாகுகை, பேரிஜம் ஏரி உள்ளிட்ட இடங்களில் இயற்கை அழகை சுற்றுலா பயணிகள் ரசித்தனர்.
உற்சாக கொண்டாட்டம்
இதமான காலநிலையை சுற்றுலா பயணிகள் அனுபவித்தபடி, கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் உள்ள புல்வெளிகளில் அமர்ந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.
மேலும் சுற்றுலா பயணிகள் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரியை சுற்றி சைக்கிள் மற்றும் குதிரை சவாரி மேற்கொண்டனர். அவர்கள் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
இதேபோல் கொடைக்கானலில் இருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மன்னவனூர் சூழல் சுற்றுலா மையத்துக்கும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்றனர். கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை எதிரொலியாக ஆங்காங்கே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இனிவரும் நாட்களில் புத்தாண்டை கொண்டாட சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிக அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கூடுதல் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.