கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
இதயத்தை வருடும் இதமான வானிலை நிலவுவதால், கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
இதமான சீதோஷ்ண நிலை
'மலைகளின் இளவரசி' யான கொடைக்கானலில், தற்போது இதயத்தை வருடும் இதமான சீதோஷ்ண நிலை நிலவுகிறது. இதனை அனுபவிக்க, சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
குறிப்பாக வார விடுமுறை மற்றும் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் கொடைக்கானலில் அலைமோதுகிறது. அதன்படி வாரமுறை தினத்தையொட்டி நேற்று அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் நேற்று வந்தனர்.
படகு சவாரி
கொடைக்கானலில் நேற்று காலை முதலே மிதமான வெப்பத்துடன், குளுமையான சூழ்நிலை நிலவியது. சுற்றுலா இடங்களில் அவ்வப்போது பனிமூட்டம் ஆக்கிரமித்தது. இதேபோல் சுற்றுலா பயணிகளின் விழிகளுக்கு விருந்து படைக்கும் வகையில், முகடுகளை முத்தமிட்டப்படி மேக கூட்டங்கள் தரை இறங்கின.
கொடைக்கானலுக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் அங்குள்ள மோயர்பாயிண்ட், பைன்மரக்காடுகள், பில்லர் ராக், குணா குகை, பேரிஜம் ஏரி உள்ளிட்ட சுற்றுலா இடங்களை கண்டுகளித்தனர்.
இதேபோல் பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா ஆகியவற்றில் இயற்கை எழில் கொஞ்சும் அழகை பார்த்து ரசித்தனர். கொடைக்கானல் நகரின் மையப்பகுதியில் உள்ள நட்சத்திர ஏரியில் ஆனந்தமாய் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். ஏரியை சுற்றி சைக்கிள் மற்றும் குதிரை சவாரி செய்து சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர். சுற்றுலா இடங்களில் 'செல்பி' மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
சூழல் சுற்றுலா மையம்
கொடைக்கானல் அருகே உள்ள மன்னவனூர் சூழல் சுற்றுலா மையத்துக்கும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்றனர். அங்குள்ள அடர்ந்த புல்வெளி, ஆட்டுப்பண்ணை, முயல் பண்ணை, மன்னவனூர் ஏரி ஆகியவற்றை பார்த்து ரசித்தனர்.
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.