கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்


கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 6 Feb 2023 12:15 AM IST (Updated: 6 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வார விடுமுறையையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

திண்டுக்கல்

சுற்றுலா பயணிகள்

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். குறிப்பாக வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இந்தநிலையில் வாரவிடுமுறையையொட்டி நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அதிகாலை முதலே ஏராளமான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்தனர். இதனால் வெள்ளி நீர்வீழ்ச்சி, ஏரிச்சாலை, மூஞ்சிக்கல், நாயுடுபுரம், சுற்றுலா இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு உடனடியாக சென்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். அதன்பிறகு வாகனங்கள் சுற்றுலா இடங்களுக்கு சீராக சென்றன.

படகு சவாரி

கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக மேகமூட்டம் தரையிறங்கி கடும் பனிமூட்டம் காணப்பட்டது. அத்துடன் அவ்வப்போது சாரல் மழையும் பெய்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர். ஆனால் நேற்று வழக்கமான சீசன் நிலவியது. அந்த வகையில் காலை முதல் இயல்பான வெப்பம் நிலவியது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கொடைக்கானல் வனப்பகுதியில் உள்ள மோயர் பாயிண்ட், குணாகுகை, பில்லர்ராக், பைன்மரக்காடு, பேரிஜம் ஏரி, மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம் ஆகிய இடங்களை சுற்றுலா பயணிகள் பார்த்து பொழுதுபோக்கினர். அத்துடன் அங்கு தங்களது செல்போன், கேமராக்களில் புகைப்படம் மற்றும் 'செல்பி' எடுத்தனர்.

இதேபோல் நகரின் மையப்பகுதியில் உள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் சவாரி செய்தும் உற்சாகம் அடைந்தனர். மேலும் பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்காவில் பூத்துள்ள மலர்களை பார்த்து ரசித்தனர்.


Related Tags :
Next Story