கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
குளு, குளு சீசனை அனுபவிக்க கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வந்தனர்.
சர்வதேச சுற்றுலாதலமான கொடைக்கானலில் இதயத்தை வருடும் இதமான சூழல் நிலவி வருகிறது. இதனால் சுட்டெரிக்கும் வெயில் தாக்கத்தில் இருந்து தப்பித்து, இங்கு நிலவும் குளு, குளு சீசனை அனுபவிப்பதற்காக சுற்றுலா பயணிகள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். அதன்படி வார விடுமுறையான நேற்று தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் நூற்றுக்கணக்கான வாகனங்களில் கொடைக்கானலுக்கு வந்தனர்.
குறிப்பாக கேரளாவில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பஸ்களில் கல்லூரி மாணவ, மாணவிகள் சுற்றுலா வந்து இருந்தனர். இளைஞர்கள் ஏராளமானவர்கள் தங்களது இருசக்கர வாகனங்களிலும் வருகை புரிந்தனர். இதனால் மோயர் பாயிண்ட், குணா குகை, பில்லர் ராக்ஸ், பைன் மரக்காடு, பேரிஜம் ஏரி, மன்னவனூரில் உள்ள சூழல் சுற்றுலா மையம் உள்பட பல்வேறு பகுதிகள் களை கட்டியது. அவர்கள் அங்கு புகைப்படங்கள் மற்றும் 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர். ேநற்று மதியம் 1.30 மணியளவில் பலத்த மழை பெய்தது. இதனால் பகலில் குளிர்ச்சி நிலவியது.
மழை நின்றதும் நட்சத்திர ஏரியில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தனர். அவர்கள் ஏரியை சுற்றி சைக்கிள் சவாரி, குதிரை சவாரியில் ஈடுபட்டனர். பின்னர் பிரையண்ட் பூங்கா மற்றும் ரோஜா பூங்காவில் பொழுதை போக்கினர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.