ஊட்டியில் அலைமோதும் சுற்றுலா பயணிகள்
ஊட்டியில் மலர் கண்காட்சி இன்றுடன் நிறைவடைகிறது. கண்காட்சியை கண்டு ரசிக்க ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
ஊட்டி
ஊட்டியில் மலர் கண்காட்சி இன்றுடன் நிறைவடைகிறது. கண்காட்சியை கண்டு ரசிக்க ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
மலர் கண்காட்சி
சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக நீலகிரி மாவட்டம் திகழ்கிறது. இங்கு ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா நடத்தப்படுகிறது. நடப்பாண்டில் கடந்த 6-ந் தேதி கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் கோடை விழா தொடங்கியது. தொடர்ந்து கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி, ஊட்டியில் ரோஜா கண்காட்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.
இந்த ஆண்டு சிறப்பம்சமாக பலூன் திருவிழா, தேயிலை கண்காட்சி உள்ளிட்ட புது நிகழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் நடந்தது. இந்தநிலையில் கோடை விழாவின் முக்கிய நிகழ்வான 125-வது மலர் கண்காட்சி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கடந்த 19-ந் தேதி தொடங்கியது.
மயில் சிற்பம்
கண்காட்சியில் 80 ஆயிரம் கார்னேசன் மலர்களை கொண்டு தேசிய பறவையான மயில் சிற்பம் பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. தாவரவியல் பூங்கா உருவாகி 175 ஆண்டுகள் ஆனதையொட்டி, 175-வது ஆண்டு பூங்கா, ஊட்டி-200, தமிழ்நாடு மாநில விலங்கான வரையாடு, பட்டாம்பூச்சி, செங்காந்தள் மலர் உள்பட பல்வேறு அலங்காரங்கள் இடம்பெற்று உள்ளது. மேலும் பல வண்ண மலர்களால் செல்பி ஸ்பாட் அமைக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் மலர் மாடத்தில் 35 ஆயிரம் பூந்தொட்டிகள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது. அதில் பூத்து குலுங்கும் பல வண்ண மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். 4-வது நாளான நேற்று கண்காட்சியை கண்டு களிக்க வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிந்து உள்ளனர். தாவரவியல் பூங்காவில் மலர் அலங்காரங்களை கண்டு ரசிப்பதோடு, செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.
சுற்றுலா பயணிகள் குதூகலம்
தொடர்ந்து பெரிய புல்வெளி மைதானத்தில் சுற்றுலா பயணிகள் அமர்ந்து ஓய்வெடுக்கின்றனர். அப்போது அவர்கள் குழந்தைகளுடன் விளையாடி மகிழ்கின்றனர். மேலும் அவ்வப்போது நடக்கும் கலைநிகழ்ச்சிகளை கண்டு ரசிக்கின்றனர். இந்தநிலையில் மதியம் 2 மணி முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் பரவலாக மழை பெய்தது. இதனால் சுற்றுலா பயணிகள் உடனடியாக அங்கிருந்து தங்கும் விடுதிகளுக்கு சென்றனர். சில சுற்றுலா பயணிகள் மழையில் நனையாமல் குடைகளை பிடித்தபடி, பூங்காவில் இதமான காலநிலையை அனுபவித்தனர்.
இதற்கிடையே மலர் கண்காட்சியையொட்டி ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் சுற்றுலா தலங்களுக்கு திட்டமிட்டபடி செல்ல முடியாமல் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர்.
பரிசளிப்பு விழா
125-வது மலர் கண்காட்சி இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) நிறைவடைகிறது. இதையொட்டி நடைபெறும் பரிசளிப்பு விழாவில் நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு, கண்காட்சி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்குகின்றனர். நிறைவு நாளான இன்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.