முதுமலையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்


முதுமலையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
x
தினத்தந்தி 2 May 2023 12:15 AM IST (Updated: 2 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

முதுமலையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அங்கு வளர்ப்பு யானைகளுக்கு உணவு வழங்குவதை பார்வையிட்டனர்.

நீலகிரி

கூடலூர்,

முதுமலையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அங்கு வளர்ப்பு யானைகளுக்கு உணவு வழங்குவதை பார்வையிட்டனர்.

வனவிலங்குகளை ரசித்தனர்

தமிழகத்தில் பள்ளிக்கூடங்களில் தேர்வுகள் முடிவடைந்து விடுமுறை விடப்பட்டு உள்ளது. இந்த விடுமுறையை கழிக்கவும், நீலகிரியில் நிலவும் குளுகுளு காலநிலையை அனுபவிக்கவும் சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மேலும் கோடை வெயிலின் தாக்கத்தால் நீலகிரி மாவட்டம் உள்ளிட்ட மலைப்பிரதேசங்களுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கி நடந்து வருகிறது. இதனால் கேரளா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் நடமாடி வரும் வனவிலங்குகளை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

வளர்ப்பு யானைகள்

இந்தநிலையில் நேற்று முதுமலை தெப்பக்காடு முகாமில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். முகாமில் வளர்ப்பு யானைகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்குவதை பார்வையிட்டனர். வளர்ப்பு யானைகளை கண்டு ரசித்ததோடு, புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். மேலும் ஆஸ்கார் விருது பெற்ற படத்தில் இடம்பிடித்த ரகு, பொம்மி யானைகளை கண்டு ரசித்தனர். வனத்துறை சார்பில் வாகன சவாரி சென்றனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளதால், தங்கும் விடுதிகளில் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு நிரம்பி வழிகிறது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, முதுமலையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. அவர்கள் வனத்துறை கட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றனர். இதேபோல் மசினகுடி சுற்றுவட்டார பகுதியில் உள்ள தங்கும் விடுதிகள் நிரம்பி உள்ளதோடு, தனியார் ஜீப் சவாரி களை கட்டி உள்ளது.

இதனால் வியாபாரிகள் மற்றும் சுற்றுலா சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு உள்ள தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


Next Story