கோடை வெயிலின் உஷ்ணத்தை தணிக்கதிற்பரப்புக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
கோடை வெயிலின் உஷ்ணத்தை தணிக்க திற்பரப்புக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர். அங்கு அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
திருவட்டார்:
கோடை வெயிலின் உஷ்ணத்தை தணிக்க திற்பரப்புக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர். அங்கு அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
திற்பரப்பு அருவி
கோடைவிடுமுறையில் வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் குடும்பம், குடும்பமாக சுற்றுலாத்தலங்களை நோக்கி மக்கள் படையெடுத்து வருகிறார்கள்.
குமரி மாவட்டத்தில் கோடை மழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை. மற்ற மாவட்டங்களில் பெய்ததை விட குறைவாகவே பெய்துள்ளது. எனினும் திற்பரப்பு அருவியில் மிதமாக தண்ணீர் கொட்டி வருகிறது. அங்கு அவ்வப்போது குளு, குளு சீசனும் நிலவுகிறது. இதனால் குமரி மற்றும் வெளி மாவட்டத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் திற்பரப்பை நோக்கி சாரை, சாரையாக வாகனங்களில் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
கூட்டம் அலைமோதியது
இந்தநிலையில் நேற்று அருவியில் குளிக்க கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது. நெரிசலுக்கு இடையே அவர்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
மேலும் அருவியின் அருகில் உள்ள நீச்சல் குளத்திலும் சிறுவர், சிறுமிகள் மகிழ்ச்சியாக பொழுதை போக்கியதை காணமுடிந்தது. பிறகு தடுப்பணையில் படகு சவாரி செய்து இயற்கை அழகை ரசித்தனர். திற்பரப்புக்கு ஏராளமான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வந்ததால் அங்கு சில நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
சுற்றுலா பயணிகள் குற்றச்சாட்டு
திற்பரப்புக்கு வந்த சுற்றுலா பயணிகள் கூறுகையில், அருவியில் தண்ணீர் குறைவாக விழுகிறது. எனினும் அதில் குளித்தது குதூகலமாக இருந்தது. அருவியின் எதிர்புறம் சிறிய அளவில் தான் பெண்கள் உடைமாற்றும் அறை உள்ளது.
இந்த அறையில் போதிய சுகாதாரம் இல்லை. மேலும் உடை மாற்றும் அறைக்குச் செல்ல அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றனர்.