பத்மநாபபுரம் அரண்மனையை காண குவிந்த சுற்றுலா பயணிகள்
புத்தாண்டு பிறப்பையொட்டி பத்மநாபபுரம் அரண்மனையை காண குவிந்த சுற்றுலா பயணிகள்
தக்கலை,
தக்கலை அருகே உள்ள பத்மநாபபுரத்தில் திருவிதாங்கூர் மன்னர்கள் வாழ்ந்த பிரமாண்ட அரண்மனை உள்ளது. ஓடுகள் வேயப்பட்ட மேற்கூரையுடன் காணப்படும் பழமையான இந்த அரண்மனையின் ஒவ்வொரு அறைகளும் பிரமிப்பை ஏற்படுத்தும் விதமாக மரத்திலான சிற்பங்கள், பூக்களின் வடிவங்கள், மன்னர்கள் பயன்படுத்திய பொருட்கள், போர் கருவிகள், பச்சிலை சாறினால் வரையப்பட்ட ஓவியங்கள், சுட்ட சுண்ணாம்பு, கடுக்காய், பனைவெல்லம், முட்டையின் வெள்ளை கரு போன்ற கலவையை கொண்டு போடப்பட்ட பளிங்கு கல்லை போன்று பளபளக்கும் குளிர்ச்சியான தரை என பல்வேறு அம்சங்கள் இங்கு உள்ளது.
இதனை காண்பதற்காக தினம்தோறும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் வழக்கத்திற்கு மாறாக கூட்டம் அதிகமாக காணப்படும். தற்போது தொடர் விடுமுறை என்பதால் கடந்த ஒரு வாரமாக கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இந்தநிலையில் 2023-ம் ஆண்டு புத்தாண்டு பிறப்பையொட்டி நேற்றும் அதிகமான சுற்றுலா பயணிகள் அரண்மனைக்கு வருகை தந்திருந்தனர்். அவ்வாறு வந்தவர்கள் அரண்மனையை கண்டு ரசித்து சென்றனர்.