கன்னியாகுமரியில் புத்தாண்டின் முதல் சூரியோதயத்தை காண குவிந்த சுற்றுலா பயணிகள்
கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் புத்தாண்டின் முதல் சூரியோதயத்தை காண சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அந்த காட்சியை செல்போனில் படம் பிடித்து உற்சாகம் அடைந்தனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் புத்தாண்டின் முதல் சூரியோதயத்தை காண சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அந்த காட்சியை செல்போனில் படம் பிடித்து உற்சாகம் அடைந்தனர்.
சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.
தற்போது சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இந்தநிலையில் நேற்று ஆங்கில புத்தாண்டு என்பதால் அய்யப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் ஏராளமானவர்கள் குவிந்தனர்.
சூரியோதயத்தை காண ஆர்வம்
முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் அதிகாலையில் திரண்டு புத்தாண்டின் முதல் சூரியோதயத்தை பார்த்து ரசித்தனர்.மேலும் சூரியன் உதயமான காட்சியை படம் பிடிப்பதில் ஆர்வம் காட்டினர். அதைத்தொடர்ந்து கடலில் நீராடி பகவதி அம்மனை தரிசனம் செய்தனர்.
மேலும் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தை சுற்றுலா பயணிகள் படகு மூலம் சென்று பார்த்து ரசித்தனர். இதற்காக படகுத்துறையில் நீண்ட வரிசையில் சுற்றுலா பயணிகள் காத்திருந்தனர்.
களை கட்டியது
இதுபோக காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள சன்செட் பாயிண்ட், அரசு அருங்காட்சியகம், சுற்றுச்சூழல் பூங்கா உள்பட அனைத்து இடங்களிலும் நேற்று காலையிலிருந்து சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், சுற்றுலா பாதுகாவலர்களும் ரோந்து சுற்றி வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
கடந்த 2 வருடங்களுக்கு பிறகு கன்னியாகுமரி புத்தாண்டு அன்று களை கட்டியது. இதனால் கன்னியாகுமரியில் உள்ள வியாபாரிகளும் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
11,700 பேர்
இந்தநிலையில் புத்தாண்டு பிறப்பையொட்டி ஆண்டின் முதல் நாளான நேற்று விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்வையிட சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. அந்த வகையில் நேற்று மட்டும் 11 ஆயிரத்து 700 பேர் படகில் சென்று கண்டு ரசித்தனர்.