திற்பரப்பு அருவிக்கு சுற்றுலா பயணிகள் படையெடுப்பு


திற்பரப்பு அருவிக்கு சுற்றுலா பயணிகள் படையெடுப்பு
x
தினத்தந்தி 21 Nov 2022 12:15 AM IST (Updated: 21 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

குளு, குளு சீசன் நிலவும் திற்பரப்பு அருவிக்கு நேற்று சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர். அங்கு அவர்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

கன்னியாகுமரி

திருவட்டார்:

குளு, குளு சீசன் நிலவும் திற்பரப்பு அருவிக்கு நேற்று சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர். அங்கு அவர்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

திற்பரப்பு அருவி

குமரி மாவட்டத்தில் பெய்த மழையால் அணைகளுக்கு அதிக அளவு தண்ணீர் வந்தது. அது உபரி நீராக திறந்து விடப்பட்டதால், திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போது கடந்த 6 நாட்களாக மழை இல்லாததால் கோதையாற்றில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது.

இதனால் கோதையாற்றின் குறுக்கே உள்ள திற்பரப்பு அருவியில் மிதமாக தண்ணீர் பாய்கிறது. நேற்று விடுமுறை நாள் என்பதால் தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திற்பரப்புக்கு படையெடுத்தனர். அங்கு அருவியில் அவர்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். தற்போது சபரிமலை சீசன் தொடங்கி உள்ளதால், அய்யப்ப பக்தர்களின் வருகையும் அதிகரித்துள்ளது. சபரிமலைக்கு சென்று விட்டு கன்னியாகுமரிக்கு வரும் அய்யப்ப பக்தர்கள் அருவியில் குளித்து மகிழ்ந்ததையும் காணமுடிந்தது. அருவி எதிரில் உள்ள பூங்கா மற்றும் அலங்கார நீரூற்று ஆகியவற்றையும் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். அருவியின் மேல் பகுதியில் அணைக்கட்டில் உல்லாச படகு சவாரியும் செய்தனர்.

குளு, குளு சீசன்

திற்பரப்பில் வெயிலின் தாக்கம் குறைந்து, குளு குளு சீசன் நிலவியது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக இருந்தனர். திற்பரப்பு அணைக்கட்டையொட்டி அலங்கார இசை நீரூற்று முன்பு செயல்பட்டு வந்தது. தற்போது அது இயக்கப்படுவது இல்லை. கடையால் பஞ்சாயத்து பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த அலங்கார இசை நீரூற்று மீண்டும் இயக்கப்படவேண்டும் என்பதே சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பு ஆகும்.

மாத்தூர் தொட்டிப்பாலம், பத்மநாபபுரம் அரண்மனை, முட்டம் ஆகிய சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது.


Next Story