கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
வாரவிடுமுறையையொட்டி கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர்.
சுற்றுலா பயணிகள்
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் தற்போது குளு, குளு சீசன் நிலவி வருகிறது. இதையொட்டி தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தருகின்றனர். அதன்படி, வார விடுமுறை என்பதால் அதிகாலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்தனர். ஒரே நேரத்தில் பல்வேறு வாகனங்கள் வந்ததால் நகரின் முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.
மழையில் நனைந்தபடி...
இதற்கிடையே சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்ததால் சுற்றுலா இடங்கள் களைக்கட்டின. பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, பைன்மரக்காடு, மோயர் பாயிண்ட், பில்லர் ராக், குணாகுகை உள்ளிட்ட சுற்றுலா இடங்களையும், வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார் அருவி, தேவதை அருவி, பியர் சோழா அருவி உள்ளிட்ட நீர்நிலைகளையும் பார்த்து சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர். மேலும் நட்சத்திர ஏரியில் படகு சவாரி மற்றும் ஏரிச்சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் சவாரி செய்தும் சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.
இந்தநிலையில் கொடைக்கானலில் சுமார் 2 மணி நேரம் மிதமான மழை பெய்தது. இதனால் மழையில் நனைந்தபடி சுற்றுலா இடங்களை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.
மரம் சாய்ந்தது
மேலும் இந்த மழை காரணமாக பூலத்தூர் கிராமத்திற்கு செல்லும் மலைப்பாதையில் கும்பரையூர் என்ற பகுதியில் மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. இதனால் பூலத்தூருக்கு செல்லும் மலைப்பாதையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கொடைக்கானல் போலீசார் மற்றும் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மரத்தை வெட்டி அகற்றினர். அதன்பிறகு போக்குவரத்து சீரானது.
இதற்கிடையே தொடர் மழை காரணமாக வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார்அருவி பியர் சோலா அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் அதிக அளவு கொட்டியது. மழையை தொடர்ந்து குளிர்ச்சியான சீதோஷ்ண சூழல் நிலவியது. இதனை சுற்றுலா பயணிகள் அனுபவித்து மகிழ்ந்தனர்.