காணும் பொங்கலையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குதூகலம்


காணும் பொங்கலையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குதூகலம்
x

காணும் பொங்கலையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்து குதூகலித்தனர்.

திண்டுக்கல்

காணும் பொங்கலையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்து குதூகலித்தனர்.

சுற்றுலா பயணிகள்

'மலைகளின் இளவரசி' யான கொடைக்கானலில் பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இந்தநிலையில் மாட்டுப்பொங்கலுக்கு அடுத்த நாள் காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில் பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் சுற்றுலா மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு சென்று ெகாண்டாடுவது வழக்கம். அதன்படி, நேற்று காணும் பொங்கல் பண்டிகையையொட்டி கொடைக்கானலுக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர்.

அதிகாலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களில் கொடைக்கானலுக்கு வருகை தந்தனர். பஸ், வேன், கார் உள்ளிட்ட சுற்றுலா வாகனங்களில் அவர்கள் வந்ததால் நகரின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

போக்குவரத்து நெரிசல்

குறிப்பாக கொடைக்கானல் நுழைவு பகுதியான வெள்ளி நீர்வீழ்ச்சி, மூஞ்சிக்கல், நாயுடுபுரம், மேல்மலைக்கு செல்லும் கோசன் மலைப்பாதை உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர்.

இதையடுத்து சம்பவ இடங்களுக்கு போக்குவரத்து போலீசார் சென்று, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். இருப்பினும் சுற்றுலா பயணிகள், சுற்றுலா இடங்களுக்கு குடும்பம், குடும்பமாக சென்று பொழுதுபோக்கினர்.

மோயர் பாயிண்ட், குணா குகை, பைன் மரக்காடு, பில்லர்ராக், கோக்கர்ஸ்வாக் உள்ளிட்ட சுற்றுலா இடங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அப்போது அவர்கள் சுற்றுலா இடங்களை பார்த்து ரசித்ததுடன், தங்களது செல்போன், கேமராக்களில் புகைப்படம், செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

படகு சவாரி

இதேபோல் நகரின் மையப்பகுதியில் உள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் சைக்கிள் சவாரி, குதிரை சவாரி மேற்கொண்டும் உற்சாகம் அடைந்தனர்.

இதுதவிர பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா ஆகியவற்றிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவு காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்ததால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Related Tags :
Next Story