ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
தொடர் விடுமுறையையொட்டி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
ஊட்டி
தொடர் விடுமுறையையொட்டி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
தொடர் விடுமுறை
நீலகிரி மாவட்டம் ஊட்டி சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆண்டுதோறும் கோடை சீசனான ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும். நடப்பாண்டில் கோடை சீசன் தொடங்கி உள்ளது. இருப்பினும், சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக இருந்தது.
இந்த நிலையில் கடந்த 14-ந் தமிழ் புத்தாண்டு, சனி மற்றும் ஞாயிறு என 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டது. இந்த விடுமுறையை ஊட்டியில் கழிக்கவும், சமவெளி பகுதியில் கோடை வெயில் சுட்டெரிப்பதால் குளு, குளு காலநிலை நிலவும் ஊட்டியில் வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் லவ்டேல் சந்திப்பு, சேரிங்கிராஸ் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கண்டு ரசிப்பு
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அங்குள்ள கண்ணாடி மாளிகையில் பூத்து குலுங்கிய பல வண்ண மலர்களை கண்டு ரசித்தனர். மேலும் மலர்கள் முன்பு செல்பி மற்றும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பெரிய புல்வெளி மைதானத்தில் குடும்பத்தினருடன் அமர்ந்து ஓய்வெடுத்தனர். ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
அங்கு மிதி படகு, துடுப்பு படகு, மோட்டார் படகுகளில் சவாரி செய்து மகிழ்ந்தனர். இதேபோல் பைக்காரா படகு இல்லம், ரோஜா பூங்கா, சூட்டிங்மட்டம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. கடந்த 3 நாட்களில் ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். கோடை சீசனையொட்டி அடுத்த மாதம் மலர் கண்காட்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.