வேளாங்கண்ணியில் குவியும் சுற்றுலா பயணிகள்


வேளாங்கண்ணியில் குவியும் சுற்றுலா பயணிகள்
x

வேளாங்கண்ணியில் குவியும் சுற்றுலா பயணிகள்

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி பேராலயத்தில் வருகிற 7-ந்தேதி பெரிய தேர்பவனி நடக்கிறது. இதனை முன்னிட்டு வேளாங்கண்ணியில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

வேளாங்கண்ணி பேராலயம்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கியமாதா பேராலயம் உள்ளது. ஆரோக்கியமாதாவின் அருளை பெறவும், வங்கக்கடலோரம் அமைந்துள்ள இந்த ஆலயத்தின் கட்டிட அமைப்பை ரசிக்கவும் உலகெங்கிலும் இருந்து மக்கள் வேளாங்கண்ணிக்கு வருவது வழக்கம். இதன் காரணமாக வேளாங்கண்ணியில் எப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதும்.

கீழை நாடுகளின் 'லூர்துநகர்' என்று இந்த பேராலயம் அழைக்கப்படுகிறது. இந்தியாவில் கட்டப்பட்டுள்ள பேராலய கட்டிட அமைப்புகளில் 'பசிலிக்கா' என்னும் சிறப்பு அந்தஸ்தை பெற்று விளங்குகிறது வேளாங்கண்ணி பேராலயம்.

மாதா பிறப்பு திருவிழா

பல்வேறு சிறப்புகளை கொண்ட வேளாங்கண்ணி ேபராலயத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர் 8-ந் தேதி மாதாவின் பிறந்த நாளை முன்னிட்டு திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி கொடியேற்றப்பட்டு, செப்டம்பர் 8-ந் தேதி வரை 11 நாட்கள் கோலாகலமாக நடைபெறும் இந்த திருவிழாவில் பங்கேற்க ஏராளமானோர் வருகை தருவார்கள்.

அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் (ஆகஸ்டு) 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

பெரிய தேர் பவனி

வருகிற 8-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வரை விழா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி வருகிற 7-ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. இந்த நிலையில் வேளாங்கண்ணியில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

தேர்பவனியில் கலந்துகொள்வதற்காக தமிழ்நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வேளாங்கண்ணி வந்துள்ளனர். இதன் காரணமாக வேளாங்கண்ணியில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.


Next Story