கோடை விடுமுறையையொட்டி அழகர்கோவிலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கோடை விடுமுறையையொட்டி அழகர்கோவிலில் சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் குவிந்தனர்.
அழகர்கோவில்,
கோடை விடுமுறையையொட்டி அழகர்கோவிலில் சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் குவிந்தனர்.
அழகர் கோவில்
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றானது, மதுரைக்கு வடக்கே 22 கி.மீ. தொலைவில் அழகர் மலை அடிவாரத்தில் இயற்கை எழிலுடன் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலாகும். இக்கோவிலில் பல கோடி ரூபாய் மதிப்பில் வளர்ச்சி பணிகள், திருப்பணிகள், சீரமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது கோடை விடுமுறை காலம் என்பதால் இங்கு சுற்றுலா பயணிகளும், வெளிநாடுகளை சேர்ந்தவர்களும், ஏராளமான பக்தர்களும் தினமும் குவிந்த வண்ணமாக உள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை அரசு பொது விடுமுறை மற்றும் பள்ளி விடுமுறை என்பதாலும் அழகர்கோவிலில் கூட்டம் காலை முதல் மாலை வரை அலைமோதியது. இதையொட்டி அழகர் மலை உச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற நூபுர கங்கை தீர்த்தத்தில் பக்தர்கள் புனித நீராடி அங்குள்ள ராக்காயி அம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து வரும் வழியில் உள்ள முருகப் பெருமானின் ஆறாவது படைவீடான சோலைமலை முருகன் கோவிலிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்தனர். மூலவர் வித்தக விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, மற்றும் வேல்சன்னதியில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனைகளும் நடந்தது.
குவிந்த சுற்றுலா பயணிகள்
அழகர் மலை அடிவாரத்தில் உள்ள கள்ளழகர் சுந்தரராச பெருமாள், காவல் தெய்வம் பதினெட்டாம் படிகருப்பணசாமி கோவில்களில், பக்தர்கள் குவிந்து வரிசையாக சென்று நெய் விளக்கேற்றி தரிசனம் செய்தனர். இதையொட்டி வெப்பத்தை தணிக்கும் வகையில் சிறியவர் முதல் பெரியவர் வரை அங்குள்ள பெரியாழ்வார் நவீன சிறுவர் பூங்காவில் குடும்பம், குடும்பமாக சென்று அங்குள்ள நீரூற்றுகளையும், மூலிகை மரம், செடி கொடிகளையும், பலன் தரும் மர வகைகளையும் பார்த்து ரசித்தனர்.
மேலும் பதினெட்டாம் படி கருப்பணசாமி ராஜகோபுரம் முன்பு அமைக்கப்பட்டுள்ள பச்சை பசுமையான பூங்காவையும், பூச்செடி வகைகளையும், குரங்குகள், பறவைகள், உள்ளிட்ட வன விலங்குகளையும் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்கின்றனர். பொதுவாக பக்தர்கள் மண்டபத்தில் தங்குவதற்கும், முதியவர்கள் சென்று வருவதற்கு பேட்டரி இலவச கார் வசதியும், செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் கண்காணிப்பாளர்கள், கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.