நிழல் இல்லாத தினத்தை காண குவிந்த சுற்றுலா பயணிகள்


நிழல் இல்லாத தினத்தை காண குவிந்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 17 April 2023 12:30 AM IST (Updated: 17 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் வானியல் ஆராய்ச்சி மையத்தில், நிழல் இல்லாத தினத்தை காண்பதற்கு சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

திண்டுக்கல்

நிழல் இல்லாத நாள்

ஆண்டுக்கு 2 முறை மட்டும் அரிய நிகழ்வாக நிழல் இல்லாத நாள் ஏற்படுகிறது. இந்த நாளில் பூமியானது 23 டிகிரி சாய்ந்து, அச்சரேகையில் சுற்றியபடி சூரியனையும் சுற்றி வருகிறது. அப்படி சுற்றும் போது, சூரியனை நோக்கி சாய்ந்து இருக்கும் கோணமும் சிறிது சிறிதாக மாறி கொண்டே இருக்கும்.

இவ்வாறு மாறும் போது, ஒரு சில நாட்களில் மட்டும் பூமியின் அச்சு சூரியனை நோக்கி சாயாமல் பக்கவாட்டில் இருக்கும். அப்போது நிழல் நேர்கோட்டு பகுதியில் செங்குத்தாக விழும். இந்த நாள், நிழல் இல்லாத நாள் அல்லது பூஜ்ஜிய நிழல் தினம் என்று அழைக்கப்படுகிறது. நேற்று இந்த அரிய நிகழ்வு ஏற்பட்டது.

இதனை காண, கொடைக்கானலை அடுத்த அப்சர்வேட்டரி பகுதியில் அமைந்துள்ள வானியல் ஆராய்ச்சி மையத்தில் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் வந்து குவிந்தனர்.

புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி

நேற்று பகல் 12.20 மணியளவில் செங்குத்தாக நிற்கும் பொருளின் மீது சூரிய ஒளி விழுந்தது. அப்போது அதன் நிழல் தெரியவில்லை. இந்த நிகழ்வை, வானியல் ஆராய்ச்சி மையத்தில் திறந்தவெளியில் நிகழ்த்தி காட்டப்பட்டது.

அதன்படி செங்குத்தாக நின்ற இரும்பு கம்பி மீது சூரிய ஒளி விழுவதையும், இரும்பு கம்பியின் நிழல் தெரியாமல் இருப்பதையும் காண்பித்தனர். இந்த அரிய நிகழ்வினை சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

இதனை சுற்றுலா பயணிகள் புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர். இந்த நிகழ்வு குறித்து சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஆராய்ச்சி மைய முதன்மை விஞ்ஞானி எபிநேசர் விளக்கி கூறினார். மேலும் இதே போன்ற நிகழ்வு மீண்டும் வருகிற ஆகஸ்டு 26-ந்தேதி 12.22 மணிக்கு ஏற்படும் என்று அவர் தெரிவித்தார்.


Related Tags :
Next Story