வனப்பகுதிக்குள் அத்துமீறும் சுற்றுலா பயணிகள்


வனப்பகுதிக்குள் அத்துமீறும் சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 22 May 2023 5:15 AM IST (Updated: 22 May 2023 5:15 AM IST)
t-max-icont-min-icon

முதுமலை, மசினகுடியில் வனப்பகுதிக்குள் சுற்றுலா பயணிகள் அத்துமீறி செல்கின்றனர். இதனால் காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தாக்கும் அபாயம் உள்ளது.

நீலகிரி

கூடலூர்

முதுமலை, மசினகுடியில் வனப்பகுதிக்குள் சுற்றுலா பயணிகள் அத்துமீறி செல்கின்றனர். இதனால் காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தாக்கும் அபாயம் உள்ளது.

சுற்றுலா பயணிகள்

முதுமலை, மசினகுடி சுற்றுவட்டார வனப்பகுதியில் காட்டு யானைகள், புலிகள், கரடிகள், செந்நாய்கள், சிறுத்தைகள், புலிகள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இதனால் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் பொதுமக்கள் நுழைய வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர். இந்தநிலையில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள், புலிகள், கரடிகள் தாக்கி கடந்த காலங்களில் பலர் உயிரிழந்தனர்.

மேலும் வனப்பகுதியில் நடந்து செல்லும் வன ஊழியர்களும் வனவிலங்குகளின் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். இந்தநிலையில் நீலகிரியில் கோடை சீசன் களை கட்டி உள்ளதால், சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளது. கேரளா, கர்நாடகாவில் இருந்து முதுமலை, கூடலூர் வழியாக நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் சென்று வருகின்றனர்.

வனப்பகுதிக்குள் செல்பி

அவ்வாறு வரும் போது, அவர்கள் சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்தி விட்டு வனப்பகுதிக்குள் அத்துமீறி செல்கின்றனர். அங்கு பசுமையான மரங்களுக்கு நடுவே நின்று செல்பி, புகைப்படம் எடுத்து வருகின்றனர். இதனால் வனவிலங்குகள் தாக்குதலுக்கு ஆளாகும் அபாயம் உள்ளது. மசினகுடி பகுதிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக மாவனல்லா, மாயார், வாழைத்தோட்டம் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ள நிலையில், அங்கு சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்துகின்றனர்.

இதனால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறும் போது, வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பது குறித்து வெளி மாநில சுற்றுலா பயணிகளுக்கு தெரிவதில்லை. இதை அறியாமல் வனப்பகுதிக்குள் சென்று விடுகின்றனர். எனவே, வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தினால் அசம்பாவிதங்களை தவிர்க்க முடியும் என்றனர்.


Next Story