ஆட்டோ மீது டவுன் பஸ் மோதல்; 5 பேர் படுகாயம்
கறம்பக்குடி அருகே ஆட்டோ மீது டவுன் பஸ் மோதியதில் 5 பேர் படுகாயமடைந்தனர்.
ஆட்டோ- பஸ் மோதல்
கறம்பக்குடி அருகே உள்ள அம்புக்கோவில் பகுதியை சேர்ந்த சிலர் கறம்பக்குடியில் நடைபெற்ற உறவினர் இல்ல விழாவில் கலந்து கொண்டு விட்டு ஆட்டோவில் அம்புக்கோவிலுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். அம்புக்கோவில் அனுமார் கோவில் வளைவில் திரும்பும் போது எதிரே கந்தர்வகோட்டையில் இருந்து கறம்பக்குடிக்கு வந்து கொண்டிருந்த அரசு டவுன் பஸ் எதிர்பாராதவிதமாக ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதியது.
5 பேர் படுகாயம்
இதில் ஆட்டோவில் பயணம் செய்த, ராணி (வயது 38) சேகர் (40), பாலையா (45) மாரியம்மாள் (60) மற்றும் ஆட்டோ டிரைவர் ராஜா (42) ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு 5 பேருக்கும் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதுகுறித்து கறம்பக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.