15 ஆண்டுகளுக்கு பிறகு டவுன் பஸ் போக்குவரத்து
குடியாத்தம்-அணங்காநல்லூர் இடையே 15 ஆண்டுகளுக்கு பிறகு டவுன் பஸ் போக்குவரத்து தொடங்கியது.
குடியாத்தம் அடுத்த அணங்காநல்லூர் கிராமத்திற்கு தினமும் குடியாத்தம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து அரசு டவுன் பஸ் சென்று வந்தது. இந்த பஸ் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. மீண்டும் பஸ் இயக்கக்கோரி இப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளிடம் தொடர்ந்து மனு அளித்து வந்தனர்.
இந்தநிலையில் மீண்டும் குடியாத்தம்- அணங்காநல்லூர் இடையே டவுன் பஸ் இயக்க வேண்டும் என அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க. மாவட்ட செயலாளருமான ஏ.பி.நந்தகுமார், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன் மூலமாக அப்பகுதி தி.மு.க. நிர்வாகிகள் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று குடியாத்தம்- அணங்காநல்லூர் இடையே டவுன் பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டது. குடியாத்தம் பழைய பஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு போக்குவரத்து கழக வேலூர் தலைமை அலுவலக துணைப் பொது மேலாளர் (வணிகம்) பொன்னுப்பாண்டி தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கள்ளூர்ரவி, நகர மன்ற உறுப்பினர்கள் கே.வி.கோபாலகிருஷ்ணன், கவிதாபாபு, ம.மனோஜ், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சி.ரஞ்சித்குமார், சூரியகலாமனோஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் போக்குவரத்து கழக குடியாத்தம் கிளை மேலாளர் விநாயகம் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன் கலந்து கொண்டு கொடியசைத்து பஸ் போக்குவரத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து டவுன் பஸ்சில் அணங்காநல்லூர் வரை பயணம் செய்தார். அப்போது பல ஆண்டுகளுக்குப் பிறகு டவுன் பஸ் வந்ததை பெண்கள் கண்ணீர் மல்க வரவேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.
அணங்காநல்லூர் மக்கள் சார்பில் டவுன் பஸ்சை ஊராட்சி மன்ற தலைவர் செண்பகவல்லி முருகன், துணைத்தலைவர் குமாரி கிருபானந்தம் ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து டவுன் பஸ்சுக்கு பூஜைகள் செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள். அரசு அதிகாரிகள், தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.