மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதி வாலிபர் பலி


மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதி வாலிபர் பலி
x
தினத்தந்தி 5 Jan 2023 12:15 AM IST (Updated: 5 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தட்டார்மடம் அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

தட்டார்மடம் அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். மற்றொரு வாலிபர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

மோட்டார் சைக்கிள் மீது...

தட்டார்மடம் அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் சாலமோன் மகன் ஸ்டேன்டன் அஜித். இவரது நண்பர் போலையர்புரத்தைச் சேர்ந்த ராஜன் மகன் ஜோயல்(வயது20). இவர்கள் இருவரும் நேற்று இரவு 10 மணி அளவில் அஜித்தின் மோட்டார் சைக்கிளில் சாத்தான்குளத்தில் இருந்து சுப்பிரமணிய புரத்துக்கு சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை அஜித் ஓட்டியுள்ளார்.

இந்த நிலையில் எதிர்திசையில் உடன்குடியைச் சேர்ந்த சுடலைமுத்து என்பவர் டிராக்டரில் உடன்குடிக்கு வந்து கொண்டிருந்தார். பொத்தகாலன்விளை அருகே மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாரதவிதமாக எதிரே வந்த டிராக்டர் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென்று வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

வாலிபர் சாவு

இதில் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து பயணித்த ஜோயல் ரத்த வெள்ளத்தில் சிறிது நேரத்திலேயே சம்பவ இடத்தில் பலியானார். படுகாயமடைந்த அஜித்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நெல்லைஅரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

டிரைவர் கைது

இதுகுறித்து தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராக்டர் டிரைவர் சுடலைமுத்துவை கைது செய்தனர்.


Next Story