மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதி வாலிபர் பலி


மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதி வாலிபர் பலி
x

வாணியம்பாடி அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதியதில் வாலிபர் பலியானார். டிரைவரை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்

டிராக்டர் மோதி பலி

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த ஜாப்ராபாத் பகுதியை சேர்ந்தவர் அயாஸ் அஹமத். இவருடைய மகன் அப்ரார் அஹமத் (வயது 19). தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். நேற்று காலை வழக்கம் போல மோட்டார்சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.

மேட்டுப்பாளையம் என்ற இடத்தில் மோட்டார் சைக்கிள் மீது அந்த வழியாக வந்த டிராக்டர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அப்ரார் அஹமத் சம்பவ இடத்தில் பலியானார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் வாணியம்பாடி தாலுகா போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முயன்றனர்.

சாலை மறியல்

அப்போது சம்பவ இடத்திற்கு வந்த உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் உடலை எடுக்க விடாமல் விபத்து ஏற்படுத்திய டிராக்டர் டிரைவரை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதைத்தொடர்ந்து வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விபத்தை ஏற்படுத்திய டிராக்டர் டிரைவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

அதன்பிறகு உடலை பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

டிரைவர் கைது

மறியல் போராட்டம் காரணமாக சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக வாணியம்பாடியில் இருந்து ஆந்திரா செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த விபத்து தொடர்பாக வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்ததுடன், டிரைவர் அஜீத் (26) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story