டிராக்டர் விற்பனையாளர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு
போலி ஆவணங்கள் மூலம் வாகனப்பதிவு செய்ததாக டிராக்டர் விற்பனையாளர் 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலி ஆவணங்கள் மூலம் வாகனப்பதிவு செய்ததாக டிராக்டர் விற்பனையாளர் 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 டிராக்டர்கள்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா முத்தூர் அகரஆதனூரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் மதன்மோகன்(வயது 35). விவசாயி. இவர் கடந்த 2019-ம் ஆண்டு விவசாயக்கடன் பெற்று தனியார் விற்பனை நிறுவனத்தில் 2 டிராக்டர்களை வாங்கியுள்ளார்.
இந்த நிலையில் மதன்மோகன், போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில் தனியார் நிறுவனம் கடந்த 2021-ம் ஆண்டு எனது 2 டிராக்டர்களை பறிமுதல் செய்தது. மேலும் எனது கையெழுத்தையும் போலியாக போட்டு பெயரை மாற்றி வாகனப்பதிவு செய்து மோசடி செய்து உள்ளதாக தெரிவித்திருந்தார்.
தீக்குளிக்க முயற்சி
இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மதன்மோகன் தனது தாய் உமாமகேஸ்வரியுடன் தீக்குளிக்க முயன்றார்..
அதன் பின்னரும் நடவடிக்கை எடுக்காததால் கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு விஷம் குடிக்க முயன்றார். மேலும் அவர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தார்.
2 பேர் மீது வழக்குப்பதிவு
கடந்த மாதம் புதிதாக பதவியேற்ற கலெக்டர் மகாபாரதியிடம், மதன்மோகன் புகார் அளித்தார். புகார் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
அதன் பேரில் விசாரணை நடத்திய மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் புயல் பாலச்சந்திரன் மற்றும் போலீசார் மயிலாடுதுறை, சீர்காழி சாலையில் உள்ள தனியார் டிராக்டர் நிறுவன உரிமையாளர்கள் கண்ணதாசன், வேல்முருகன் ஆகிய 2 பேர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.